புதுடில்லி:சர்வதேச யோகா தினம் தலைநகர் புதுடில்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், ராணுவத்தினர், அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் யோகா பயிற்சி செய்தனர்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று யோகா பயிற்சி செய்தார்.
மத்திய பிரதேசம் ஜபல்பூரில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்றார்.
சராய் காலே கானில் உள்ள பன்சேராவில் டில்லி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் துணை நிலை கவர்னர் சக்சேனா, பார்லி., வளாகத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டவியா, பியூஷ் கோயல் ஆகியோர் யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
புதுடில்லியில் நேரு பூங்கா, லோதி கார்டன், தல்கடோரா கார்டன், கர்தவ்ய பாதை, நியூ மோதி பாக், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குடியிருப்பு, சஞ்சய் ஜீல், சிங்கப்பூர் பூங்கா, சென்ட்ரல் பார்க், கன்னாட் பிளேஸ் உட்பட மாநகர் முழுதும் பல இடங்களில் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பிரதமர் உரை
புதுடில்லி மாநகராட்சி சார்பில், மாநகர் முழுதும் எட்டு இடங்களில் எல்.இ.டி., திரைகள் அமைத்து, பிரதமர் நரேந்திர மோடியின் யோகா தின உரை ஒளிபரப்பப்பட்டது.
டில்லி மேயர் ஷெல்லி ஓபராய், சுபாஷ் நகரில் மாநகராட்சி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா பயிற்சி செய்தார்.
ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், பானிபட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பஞ்ச்குலா நகரில், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, குருகிராம் நகரில், பா.ஜ., தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் ஹரியானா மாநில பா.ஜ., தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர், பரிதாபாத்தில், மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் மற்றும் மத்திய இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார், பா.ஜ., ஹரியானா மாநில பொறுப்பாளர் பிப்லப் குமார் தேப் ஆகியோர் பங்கேற்றனர்.
சாதனை படைத்த சூரத்!
குஜராத் மாநிலம் சூரத் நகரின் டுமாஸ் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு லட்சம் பேர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். முதல்வர் புபேந்திர படேல், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர். சூரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்