சென்னை: LEO First Single (லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள்) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் நா ரெடி என்ற பாடல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் லியோ படம் வழக்கமான லோகேஷ் பாணியிலான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் ஆனால் திரைக்கதையில் லோகி என்னென்ன மேஜிக் செய்திருக்கிறார் என்பதை பார்க்க ஆவலுடன் இருப்பதாக ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
விறுவிறு ஷூட்டிங்: படத்தின் முதல் ஷெட்யூல் காஷ்மீரில் தொடங்கி கடுமையான குளிரில் 52 நாட்கள் நடந்தது. அதன் பிறகு சென்னை பிரசாத் ஸ்டூடியோவிலும், பையனூரிலும் நடந்தது. தற்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடந்துவருகிறது. கடந்த வாரம் 2000 டான்ஸர்களுடன் விஜய் ஆடிய பாடல் படமாக்கப்பட்டது. இப்போது படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்திவருகிறார் லோகேஷ் கனகராஜ்.
விஜய் பிறந்தநாள்: லியோ படத்தின் அறிவிப்போடு வந்த க்ளிம்ப்ஸை தவிர்த்து இத்தனை மாதங்கள் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் விஜய் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். எனவே ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
ஃபர்ஸ்ட் சிங்கிள்: ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.குறிப்பாக அந்தப் போஸ்டரில் அடக்கப்படாத நதிகளின் உலகில் அமைதியான நீர் தெய்வீக கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக மாறும் என குறிப்பிடப்பட்டிருந்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியது. இந்தச் சூழலில் படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.
ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: அதன்படி தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகியிருக்கிறது. நா ரெடிதா வரவா அண்ணன் இறங்கி வரவா தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத், பிக்பாஸ் அசல் கோளாறு ஆகியோர் பாடியிருக்கின்றனர் பாடலை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியிருக்கிறார். இந்த லிரிக்கல் வீடியோவில் பாடலின் மேக்கிங்கையும், விஜய் இரண்டாயிரம் பேருடன் நடனம் ஆடும் சில நொடிகள் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. பாடல் தற்போது இணையத்தில் படு ட்ரெண்டாகியுள்ளது.
எல்சியூவில் லியோ: பாடலின் வரிகளை கேட்ட ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் எல்சியூவில்தான் வரும் என அறுதியிட்டு சொல்கின்றனர். ஏற்கனவே விக்ரம் படத்தில் தன்னுடைய கைதி படத்தின் கதாபாத்திரங்களை இணைத்து மாபெரும் வெற்றி கண்டவர் லோகேஷ் கனகராஜ். எனவே லியோ ஒருவேளை எல்சியூவில் வரும்பட்சத்தில் இதில் என்ன மாதிரியான மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார் என்பதை காண்பதற்கு ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தில் உள்ளனர்.