சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) தேவர் மகன் படம் குறித்து கமல் ஹாசனுக்கு எழுதிய கடிதம் பற்றியும், மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் தேவர் மகன் பற்றி பேசியது குறித்தும் மாரி செல்வராஜ் மௌனம் கலைத்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்ற பெயரை எடுத்தவர். அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளம் கலவரத்தை மையமாக வைத்து உருவான அந்தப் படம் சில விமர்சனங்களை சந்தித்தாலும் படம் கவனம் ஈர்த்து மாரியை முன்னணி இயக்குநர் என்ற வரிசையில் கொண்டுபோய் நிறுத்தியது.
மாமன்னன்: அவர் தற்போது தனது மூன்றாவது படமாக மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். வடிவேலும் ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேற்கு மாவட்ட அரசியலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படமானது ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அண்மையில் இதன் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.
சர்ச்சை: கமல் ஹாசன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். சாதாரணமாக முடிந்துவிடும் என்று நினைத்த ஆடியோ வெளியீட்டு விழா தேவர் மகன் பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதை அடுத்து அனல் பற்றியது. மேடையில் பேசிய மாரி செல்வராஜ், “தேவர் மகன் படம் எனக்கு பெரிய மனப்பிறழ்வை உருவாக்கிய படம். நடப்பதெல்லாம் ரத்தமும் சதையுமாக இருந்தது. இதை எப்படி நான் புரிந்துகொள்வது. இந்தப் படம் சரியா, தப்பா என்பதை புரிந்துகொள்ள முடியாத ஒரு வலி. தேவர் மகனில் இருக்கும் இசக்கி மாமன்னன் ஆனால் என்ன ஆகும் என்பதுதான் மாமன்னன் படம்” என்றார்.
கடிதம்: இதற்கிடையே மாரி செல்வராஜ் 13 வருடங்களுக்கு முன்னர் தேவர் மகன் பற்றி காட்டமாக கமல் ஹாசனுக்கு எழுதிய கடிதமும் இணையத்தில் ட்ரெண்டானது. இதனையடுத்து இந்தக் கடிதத்தையும், மாரி செல்வராஜின் பேச்சையும் வைத்து பலரும் பல கருத்தை கூறினர். ஒருதரப்பினர் மாரிக்கு சப்போர்ட் செய்ய மற்றொரு தரப்பினர் தேவர் மகன் படத்தையே மாரி செல்வராஜ் புரிந்துகொள்ளவில்லை என விமர்சித்தனர். சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுவந்த இந்த விவகாரம் குறித்து மாரி செல்வராஜ் அமைதி காத்துவந்தார்.
மௌனம் கலைத்த மாரி: இந்நிலையில் மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசுகையில், “நான் எமோஷனலான தருணம் அது. கமல் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டார். அடுத்ததாக அவர் பேசப்போகிறார். அவரிடம் நெருக்கமாக பேசிய எமோஷனல்தான் அது. அது அவருக்கும் தெரியும். 13 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதம் என்பது அப்போது எனக்கு வாசிப்பு பழக்கம் எதுவுமே கிடையாது. அன்று எனக்கு இருந்த கோபம், மொழி, வாசிப்பு அறிவு போன்றவற்றை வைத்து அது எழுதப்பட்டது.
சும்மா இல்லை: இத்தனை வருடங்கள் நான் சும்மா இல்லை. பெரிய உழைப்பை போட்டு சினிமாவை கற்றிருக்கிறேன். கமல் ஹாசன் என்னை கூப்பிட்டு பரியேறும் பெருமாளுக்காக பாராட்டியிருக்கார். மாமன்னனும் பார்த்துவிட்டார். அவருடன் உட்கார்ந்து பார்த்த பிறகு என் கையை பிடித்து அவர் வாழ்த்தியபோது எனது உடல் நடுங்கியது என்பது அவருக்கு தெரியும். மாமன்னன் படத்தை அவர் உணரக்கூடியவர். அந்தப் பேச்சுக்கு பிறகு கமல் பேசுகையில் இது மாரியின் அரசியல் அல்ல நம் அரசியல் என சொன்னபோது ஏற்பட்ட நெகிழ்ச்சியைவிட வேறு என்ன வேண்டும்.
இருந்துச்சு ஆனா இல்லை: மாமன்னன் படத்தை பார்த்த பிறகு இந்தக் கதையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என கேட்கும்போது ஒரு உண்மையை சொன்னேன். மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா விஷயம் என்பது ஒரு எமோஷனல் தருணம். என் கையை தொட்ட கமல் ஹாசனுக்கு அந்த உண்மை தெரியும். நான் பாஸிட்டிவாகத்தான் பேசினேன். 13 வருடங்களுக்கு முன்னதாக எனக்கு கோபம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. மாமன்னனை பார்த்துவிட்டு என்னை அங்கீகரித்துவிட்டார் என்று நினைக்கும்போது அது எவ்வளவு பெரிய சாதனை.
அப்பாவிடம் பேசியது போன்றது அது: மேடையில் நான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். அந்த வீடியோவை பார்த்தால் தெரியும் நான் என்னமோ பேச ஆரம்பித்து எதையோ பேசுவேன். எதையும் ப்ளான் செய்து பேசவில்லை. என் எதிரே அவர் அமர்ந்திருக்கிறார். அவர் கண்ணை பார்த்துதான் பேசினேன். மேடையிலிருந்து கீழே வந்து உதயநிதியிடம்கூட நான் தப்பா பேசிட்டேனா என பேசினேன். அவர் இல்லை கரெக்ட்டாதான் பேசுனீங்க என்றார்.
நான் வேறு யாரிடமும் பேசவில்லையே. எனக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய கலையை புரிந்துகொள்ளக்கூடிய ஒருத்தரிடம்தானே பேசினேன். இன்னும் சொல்லப்போனால் வீட்டை விட்டு ஓடிப்போய் மீண்டும் வந்து அப்பாவிடம் கோபமாக பேசியதுபோன்றுதான் அது” என்றார்.