சென்னை: Vijay (விஜய்) லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி பாடல் வரிகளை வைத்து விஜய் அரசியலுக்கு வர தகுதியே இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் லியோ. கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடத்தில் இருக்கிறது. படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. பாடலை விஜய், அனிருத், அசல் கோளாறு பாட லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியிருக்கிறார்.
கொண்டாட்டம்தான் ஆனாலும்: பாடலில் விஜய்யின் நடனம், அச்சு பிசகாமல் அவருடன் 2000 பேர் ஆடுவது, பாடலுக்கு போட்டிருக்கும் செட் பல விஷயங்களை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்தப் பாடல் நிச்சயம் பெரிய திரையில் காணும்போது கண்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் விஜய் ரசிகர்கள். அதேசமயம் பாடல் வரிகளை வைத்து விஜய்யை விளாசவும் ரசிகர்களில் சிலர் தவறவில்லை.
என்ன பிரச்னை: லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அது போதையை மையப்படுத்திதான் இருக்கும் என்ற டெம்ப்ளேட் விக்ரம் படத்திலிருந்து உருவாகிவிட்டது. லியோவும் அந்த டெம்ப்ளேட்டுக்குள்தான் வரப்போகிறது என்பது பாடலை பார்க்கும்போது உறுதியாகிறது. ஆனால் சமீபகாலமாக விஜய்யின் நகர்வுகள் அனைத்தும் அரசியலை மையப்படுத்தி இருப்பதாகவே பேச்சு அதிகமாக கேட்கும் சூழலில் இந்தப் பாடலின் வரிகளும், காட்சிகளும் இப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
முழுக்க போதை, அடிதடிதான்: பாடலில், ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவை கொண்டா சியர்ஸ் அடிக்க’, ‘அடிதடி வெட்டுக்குத்து எங்கள் வீட்டு சமையல் அறை வர கலந்திருக்கு’, ‘மில்லி உள்ளப்போனா போதும் கில்லி வெளில வருவான் டா’போன்ற வரிகள்தான் பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அதற்கு காரணம் விஜய் சமீபத்தில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்ததும், அவர்களுக்கு செய்த அட்வைஸும்தான்.
இதுதான் லட்சணமா?: மேடையில் பேசியபோது பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை படியுங்கள் என கூறினார். அவர்களை படிக்க சொல்பவர் திரையில் நடிக்கும்போது எப்படி இருக்க வேண்டும். இப்படியா வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு பாட்டில் பத்தாது அண்டாவில் குடிக்க வேண்டும், மில்லி உள்ளப்போனா என்று பாடுவது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
நலத்திட்ட உதவிகள் மட்டும் போதுமா?: விஜய் தனது மக்கள் இயக்கத்தை வைத்து பிறந்தநாளுக்கு மட்டுமின்றி பல முக்கியமான நாட்களுக்கும் நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். தரையில் அப்படி நலத்திட்ட உதவிகள் செய்பவர் திரையில் குடி, கொலை என்று தோன்றுவது எந்தவிதத்திலும் அவரது அரசியல் வருகைக்கு தகுதியே இல்லை என்கின்றனர் அவர்கள். மேலும், திரைத்துறையில் இருந்தவர்கள்தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த நினைப்பு விஜய்யை அரசியலுக்கு இழுத்து வரலாம்.
எம்ஜிஆர் இல்லை: ஆனால் திரையில் ஹீரோவாக இருந்த எம்ஜிஆர் புகைப்பிடிப்பதோ, மது அருந்துவதோ போன்ற காட்சிகளில் தோன்றவில்லை. அது மக்களிடம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. விஜய்யோ இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். இது எப்படி மக்களிடம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும்.
ஒருவேளை நாம் என்ன செய்தாலும் மக்கள் மறந்துவிடுவார்கள். நாம் அரசியலுக்கு வந்தால் நம்மை அரியணையில் அமர வைத்துவிடுவார்கள் என்ற தப்பு கணக்கை அவர் போட்டிருக்கிறாரோ என்ற விமர்சனத்தையும் முன் வைத்துவருகின்றனர்.
இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருங்கள்: மாணவ, மாணவிகளுடனான சமீபத்திய சந்திப்பின்போது வாக்கு செலுத்துவதை பற்றி விஜய் பேசியிருந்தார். முதல் தலைமுறை வாக்காளர்களான அவர்களிடம் அரசியல் லாபத்தை அறுவடை செய்யும் தொனியில் பேசப்பட்ட பேச்சாக அது கருதப்பட்டாலும் பணத்துக்கு வாக்கு செலுத்தக்கூடாது என விஜய் பேசியது அவர்களுக்குள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அப்படி அவர்களுக்கு அட்வைஸ் செய்துவிட்டு திரையில் குடியும், புகையுமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள்.
அறிவுரை வழங்கி முதல் தலைமுறை வாக்காளர்களை தன் பக்கம் திருப்ப நினைக்கும் விஜய் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் வழி தவறி செல்வதற்கு காரணமாக இருந்துவிடக்கூடாது எனக்கூறி அரசியலுக்கு வாருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. வருவதற்கு முன்பு இந்த திரைக்கூத்துக்களையும், வியாபாரத்திற்காக விஜய் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்ற பிம்பத்தையும் உடைத்துவிட்டு வாருங்கள் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். கேட்பாரா விஜய்..