சென்னை: Vijay Birthday (விஜய் பிறந்தநாள்) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரவு பாடசாலைகள் திறக்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
விஜய் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி லியோ படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். ஒரே நாளில் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நலத்திட்டங்கள்: ஒருபக்கம் விஜய் பிறந்தநாளுக்கு லியோ படக்குழு ட்ரீட் வைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தியாகராய நகர் பகுதியில் மக்களுக்கு விஜய் பிறந்தநாளை ஒட்டி இலவச உணவு வழங்கும் நிகழ்வு அரங்கேறியது. இதில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார்.
பாடசாலை: இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “,விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக விரைவில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச இரவு பாடசாலைகள் தொடங்கப்படும். அந்தப் பாடசாலைகளில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் படித்தவர்கள் வகுப்பை எடுப்பார்கள். இன்றைய தினத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகின்றனர்” என்றார்.
களைகட்டும் நலத்திட்ட உதவிகள்: இதற்கிடையே சென்னை தி நகர் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்தல், ரத்த தானம் நிகழ்வு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெரியார், அம்பேத்கர், காமராஜர் வாழ்வியல் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
அரசியல் போஸ்டர்கள்: ஒருபக்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கிவந்தாலும் மறுபக்கம் அரசியல் போஸ்டர்களும் களைகட்டுகின்றன.உதாரணமாக அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே, ஆண்டவர் ஆள்பவர் விரும்பும் தமிழின முதல்வனே என்றும், முடியட்டும் திராவிட ஆட்சி உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களும் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் நகர்வு: சில நாட்களுக்கு முன்பு பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ, மாணவிகளை விஜய் சந்தித்து ஊக்கத்தொகையையும், சான்றிதழையும் வழங்கினார். அது பாராட்டை பெற்றாலும் இது அப்பட்டமான அரசியல் நகர்வுதான் என கருத்துக்கள் மேலோங்கின. இப்படிப்பட்ட சூழலில் விஜய் ரசிகர்கள் அரசியலை மையப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டியிருப்பது மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.