கவுகாத்தி,
அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு பாதிப்பு மேலும் கடுமை அடைந்துள்ளது. நேற்று காலையிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மேலும் பல புதிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுத்து அதிக மழை மற்றும், அதிதீவிர மழை பொழியும் இடங்களை அறிவித்து இருந்தது. கவுகாத்தியில் மஞ்சள் வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
14 நிவாரண முகாம்கள்
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி 1 லட்சத்து 19 ஆயிரத்து 800 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பக்சா, பார்பெட்டா, டர்ராங், டுப்ரி, கோக்ராஜ்கர், லக்கிம்பூர், நல்பாரி, சோனிட்பூர், அடல்கரி, டேமாஜி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதில் நல்பாரி மாவட்டத்தில் மட்டும் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடுத்தபடியாக பக்சாவில் 26 ஆயிரத்து 500 பேரும், லக்கிம்பூரில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர.,
5 மாவட்டங்களில் 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 3 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மற்ற 5 மாவட்டங்களில் 17 நிவாரண வினியோக முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது.
780 கிராமங்கள்…
780 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த கிராம மக்கள் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறார்கள். 10 ஆயிரத்து 590 எக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
டிமா ஹாசோவ் மற்றும் கம்ரப் நகரங்களில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் சேதம் அடைந்துள்ளன.
பிரம்மபுத்திராவின் கிளை நதியான பெக்கி ஆற்றில் அபாயகரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.