பாட்னா: சர்வாதிகாரியாக உருமாறி எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா காந்தியை வீழ்த்த பீகார் மண்ணில் பிறந்த ஜெயபிரகாஷ் நாராயணன் அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஜனதா சர்க்கார் (ஆட்சி) உருவாக்கினார். அதே பாணியில், அதே பீகாரில் இன்னொரு ஜெயபிரகாஷ் நாராயணனாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், சர்வ வல்லமை பொருந்திய பாஜகவை வீழ்த்த அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இன்று ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்திய விடுதலைப் போரின் உச்சகால கட்டங்களில் அதிரவைத்த பெயர் ஜெயபிரகாஷ் நாராயணன். காங்கிரஸில் தீவிரவாத குழு.. இடதுசாரிகளுடன் இணக்கம்.. ஆயுதப் புரட்சி மூலம் தேச விடுதலை என்றெல்லாம் உக்கிரமாக இயங்கிய தலைவரின் பெயர் ஜெயபிரகாஷ் நாராயணன் எனும் ஜேபி. ராம் மனோகர் லோகியாவுடன் கரம் கோர்த்து சிறை களம் பல கண்ட புரட்சியாளர் ஜேபி.
ஆனால் தேச விடுதலைக்குப் பின்னர் அதிகார அரசியலை நோக்கி நகரவில்லை. 1950களுக்கு பின் நேரடி அரசியலில் இருந்து விலகினார். ஆனால் மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவது இல்லை என்பதாக 1970-களில் பீகார் அரசியலில் தீவிரமாக களமிறங்கினார் ஜேபி. பீகார் மாநிலத்தில் ஊழல், மனித உரிமைகளுக்கு எதிராக ஜேபி எனும் சிங்கம் கிளர்ந்தெழுந்து கர்ஜித்தது. அன்றைய ஜேபி எனும் புரட்சிக் குரல் பிறப்பித்த களப்போராளிகள்தான் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்டோர். ஜேபி கட்டமைத்த மாணவர் கிளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவும் இன்னொரு விடுதலைப் போருக்கு தயாராவதைப் போல புரட்சியை நோக்கி கட்டுக்கடங்காமல் முன்னேறியது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை வெலவெலக்க வைத்தது ஜேபியின் புரட்சி. இந்திராவுக்கு நீதித்துறை நெருக்கடியும் அதிகரித்தது. இதனால் இந்தியாவில் எமர்ஜென்சி எனும் அவசர நிலையை 1975-ல் அமல்படுத்தி ஜேபி மூட்டி வைத்த புரட்சித் தீயை அணைத்தார் இந்திரா எனும் சர்வாதிகாரி.
ஓயவில்லையே ஜேபி… இந்திரா காந்தி அம்மையார் நடைமுறைப்படுத்திய எமர்ஜென்சிக்கு எதிராக நாட்டின் அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டினார். காங்கிரஸ், இடதுசாரிகள் அல்லாத அத்தனை கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஜனதா கட்சியை உருவாக்கினார் ஜேபி. இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கம் ,ஆர்.எஸ்.எஸ் கூட ஜேபியுடன் கைகோர்த்தது. எமர்ஜென்சிக்குப் பின் நடைபெற்ற லோக்சபா பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி அம்மையாரை வீழ்த்தி சரித்திரம் படைத்தது ஜேபி உருவாக்கிய ஜனதா கட்சி.. ஆம் சர்வாதிகாரி இந்திரா காந்திக்கு எதிராக ஜனதா சர்க்காரை உருவாக்கிய சிற்பி ஜேபி. ஆனால் அரசியல் கட்சிகளின் அதிகார வெறியும் மோதல்களும் ஜேபியை நிலை குலையவைத்தன. இதனால் மனம் நொந்து போய் மரணித்தே போனார் ஜேபி.
சரித்திரம் எத்தனை விசித்திரமானது!
இன்று அதே பீகார் மண்ணில் அன்றைய ஜேபியின் சீடர்களான நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும் ஒட்டுமொத்த இந்திய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள்.. இந்தியாவில் சர்வ வல்லமை பொருந்திய, இந்தியாவை தொடர்ந்து ஆளக் கூடிய வல்லமை பெற்ற தோற்றத்துடன் இருக்கும் பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் மும்முரம் காட்டுகின்றன. இதன் முதல் கட்டம்தான் பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று காங்கிரஸை உள்ளடக்கிய பிரதான எதிர்க்கட்சிகளின் முதன்மை ஆலோசனைக் கூட்டம். இந்திராவுக்கு எதிராக பீகார் மண்ணில் நின்று கொண்டு ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்த ஜேபி வழியில் அவரது சிஷ்ய பிள்ளைகள் தேசத்தின் புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எப்படி மிகையாகுமாம்? இதனால்தான் அன்று ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் போல நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறார் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புகழ்ந்து கொண்டிருக்கிறார்!