ஏதென்ஸ்,
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, “இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினரின் பாதுகாப்பை” அதிபர் ஜோ பைடன் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் “எதேச்சதிகார… தாராளவாத ஜனநாயகவாதி” என்று கருதப்படும் பிரதமர் மோடி போன்ற தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று ஒபாமாவிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒபாமா, “நான் அமெரிக்க அதிபராக இருந்த போது எதிர்கொண்ட சிக்கலான பல தருணங்களில் ஒன்று ஜனநாயக விரோத தலைவர்கள் மற்றும் சர்வாதிகளுடனான சந்திப்பதாகும். அதிபர் எனும் பொறுப்பு அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்ததுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் தோழமையாக இருக்கும் சக்திகள் தனிப்பட்ட முறையில் எனக்கு அழுத்தங்களை கொடுக்கும்.
சீனாவை எடுத்துக்கொண்டால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்ய வேண்டியிருந்தது. இதில் ஏராளமான பொருளாதார நலன்கள் இருக்கின்றன. இப்படியான தருணங்களில் அமெரிக்காவின் அதிபராக இருப்பவர்கள் ஏற்கெனவே வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். அல்லது ஒத்துவராத விஷயங்களை எதிர்க்க வேண்டும். இதுவும் அதிபராக இருந்த காலத்தில் நான் எதிர்கொண்ட சவாலாகும். எங்கு எதை ஏற்க வேண்டும், எங்கு எதை எதிர்க்க வேண்டும் என்கிற புரிதல் அவசியமாகும்.
என்னை பொறுத்த அளவில் நான் குறிப்பிட்ட நடைமுறைகளை பற்றிதான் கவலைப்படுவேனே தவிர, அதன் மீதிருக்கும் கருத்துகளை பற்றி அல்ல. தற்போது அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளின் ஜனநாயகங்களும் பலவீனமடைந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல், அமெரிக்கா எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்” என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியுடனான ஜோ பைடனின் சந்திப்பு குறித்து பேசிய அவர், “இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. எனக்கு நன்கு அறிந்த பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாப்பில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதே எனது வாதத்தின் முக்கிய பகுதியாக இருந்திருக்கு. அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது. இந்த விஷயங்களைப் பற்றி நேர்மையாகப் பேசுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்” என்று ஒபாமா தெரிவித்தார்.
இதனிடையே பிரதமர் மோடி தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மோடி மற்றும் பைடன் இடையேயான இந்த முதல் சந்திப்பு, இரு தரப்புக்கும் இடையே முறையான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு களம் அமைக்கும் என்று கருதப்படுகிறது.