புதுடெல்லி: யோகா பயிற்சியை ஜவஹர்லால் நேரு பிரபலப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கூறிய நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு உலகம் முழுவதும் யோகாவை பிரபலப்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபை அறிவித்தது. இதையடுத்து, 9-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு யோகா பயிற்சி செய்யும் படத்துடன் சர்வதேச யோகா தினம் என நேற்று பதிவிடப்பட்டது.
அத்துடன், “நமது உடல் மற்றும் மனநலனை பாதுகாக்க உதவும் தொன்மையான கலையான யோகா பயிற்சியை பாராட்டி அதை நம் வாழ்வில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்” என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவின் தொடர்ச்சியாக திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.சசி தரூர், “உண்மையில், யோகா பயிற்சியை ஐ.நா. மூலம் சர்வதேச அளவில் பிரபலமாக்கிய நமது அரசு, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம் உட்பட அனைத்து தரப்பினரையும் பாராட்ட வேண்டும். பல தசாப்தங்களாக நான் வாதிடுவது போல, உலகம் முழுவதும் உள்ள நமது மென்மையான சக்தியின் ஒரு முக்கிய பகுதிதான் யோகா பயிற்சி. அது அங்கீகரிக்கப்படுவதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவை பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துக்கு டேக் செய்துள்ளார்.