"தமிழகம் காடு போல மாறி வருகிறது.. கவர்னர் சார் உடனே தலையிடுங்க".. சவுக்கு சங்கர் பதிவால் சர்ச்சை

சென்னை:
தமிழகம் காடு போல மாறி வருகிறது என்றும், ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக தலையிட வேண்டும் எனவும் யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் சிறையில் மரணம் அடைந்த சம்பவத்தை முன்வைத்து சவுக்கு சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கசாமி. கட்டட வேலை செய்து வரும் இவரை கடந்த 11-ம் தேதி புளியங்குடி போலீஸார் கைது செய்தனர். போலி மதுபானம் விற்றதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் தங்கசாமி அடைக்கப்பட்டார். இந்த சூழலில், கடந்த 14-ம் தேதி திடீர் உடல்நலக்கோளாறு காரணமாக தங்கசாமி மரணம் அடைந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கசாமியின் தாய் மற்றும் உறவினர்கள், போலீஸார் தாக்கியே தங்கசாமி இறந்ததாக கூறி அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரேதப்பரிசோதனை அறிக்கையிலும் தங்கசாமியின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீந்தர் சிங் பல் பிடுங்கிய விவகாரமே இன்னும் ஓயாத நிலையில், தற்போது தங்கசாமியின் லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்லைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்காசி கஸ்டடி மரணம் மிகப்பெரிய பிரச்சினையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 8-வது நாளாக தங்கசாமியின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்திருக்கிறார்கள். இறந்துபோன தங்கசாமி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தங்கசாமியின் சகோதரர் திருநெல்வேலி சரக டிஐஜிக்கு மனு அளித்துள்ளார்.

மிகத் தீவிரமான இதுபோன்ற விஷயத்தை 8 நாட்களாக நீடிக்க எந்தவொரு நிர்வாகமும் அனுமதிக்காது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்த போது தேவையில்லாமல் செய்த தாமதத்தால் ஒரு பெரிய கலவரமும், டிஐஜிக்கு காயம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அந்த சம்பவத்தை போலவே இந்த விவகாரத்திலும் தாமதம் செய்யப்படுகிறது. தமிழகம் காடு போல மாறி வருகிறது. தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இதில் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு சவுக்கு சங்கர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.