திருநெல்வேலி/கோவை: “நடிகர் விஜய் உள்ளிட்ட யார் பாஜக கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்” என்று சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘அடுத்த முதல்வர் நடிகர் விஜய்’ என அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஆசைப்படுவது தவறில்லை. விஜய் உள்ளிட்ட யார் பாஜக கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். பாஜக எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. பாஜக மதவாத கட்சியும் அல்ல. ‘நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு’ என சொல்வது தவறு. அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
விஜய்க்கு வானதி வரவேற்பு: இதேபோன்று, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ட்விட்டரில் சிறியதாக கருத்து பதிவிட்டால் கூட கைது நடவடிக்கை என்றால், இந்த அரசு வலுவிழந்து உள்ளதா? நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். மக்களுக்கு தேவையான பணிகளை செய்பவர்களாக நடிகர்கள் இருக்க வேண்டும். அரசியலை சினிமா படப்பிடிப்பு போன்று நினைத்து நடிகர்கள் வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.