பாட்னா: “பிஹாரில் வெற்றி பெற்றால், நாம் நாடு முழுவதும் வெற்றி பெற முடியும்” என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பாட்னா எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்பாக காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடம் பேசிய கார்கே இதனைத் தெரிவித்தார்.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேராத தலைவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக, பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிஹார் தலைநகர் பாட்னாவில் கூடியுள்ளனர். அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 18 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பாட்னா சென்றுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்த்துக்கு முன்னர் பிஹார் காங்கிரஸ் தொண்டர்கள் முன்பாக மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது. “காங்கிரஸ் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளில் இருந்து பிஹாரை தனியாக பிரிக்க முடியாது. பிஹாரில் நாம் வெற்றி பெற்றால், நாடு முழுவதும் நாம் வெற்றி பெறலாம்” என்று தெரிவித்தார். மேலும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அனைத்து வேறுபாடுகளையும் கலைந்துவிட்டு வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவை எங்கேயும் பார்க்க முடியவில்லை. அந்தக் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது” என்று தெரிவித்தார்.