ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தின்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மேடை சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முன்னாள் எம்.பி மாகந்தி பாபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பட்டுலவாரி குடம் என்ற இடத்தில் இன்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சீனராஜப்பா உரையாற்றினார்.
நிம்மகாயல சின்னராஜப்பா பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆனாலும், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உக்கிரமாக வீசிய காற்றில் மேடை மளமளவென சரிந்தது.
மேடை சரிந்ததில் மேடையில் இருந்த நிம்மகாயலா சின்னராஜப்பா உள்ளிட்ட தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் முன்னாள் எம்.பி மாகந்தி பாபு காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேடையில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளான சிந்தமனேனி பிரபாகர், பீதலா சுஜாதா உள்ளிட்டொருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேடை சரிந்து விழுந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.