புதுடெல்லி: தகவல் திருட்டு, நிதி மோசடியில் ஈடுபடும் சீன இணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து வரும் நிலையில், 4 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டொமைன்களை சீன மோசடியாளர்கள் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் இணைய வழி குற்றங்கள் அல்லது மோசடிஅதிகரித்து வருகிறது. சீனாவைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதையடுத்து, தகவல்திருட்டு, நிதி மோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் சீனஇணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துவருகிறது.
மேலும் இணையதள குற்றங்களைத் தடுப்பதற்காக, தேசியஇணையதள குற்ற எச்சரிக்கை பகுப்பாய்வுக் குழு (என்சிடிஏயு) சட்ட அமலாக்க அமைப்புகளுக்காக சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அத்துடன் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், என்சிடிஏயு கடந்த மே மாதம் நடத்திய ஆய்வில், வெறும் 4 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டொமைன்களை (இணையதள முகவரி) சீன மோசடியாளர்கள் வாங்கியிருப்பது அல்லது தொடங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
சட்ட விரோத செயல்கள்
.in என முடியும் அந்த இணையதள முகவரிகளில் ஆபாச காட்சிகள், சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த முகவரியை பார்ப்பவர்கள் அல்லது இது தொடர்பான இணைப்பை கிளிக் செய்பவர்களின் அந்தரங்க தகவல்களை திருடுவதுதான் இந்த மோசடியாளர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், இந்திய டொமைன்களை வெளிநாட்டினர் வாங்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.