சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா, தன்னுடைய இரண்டாவது சீசனை கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த தொடரின் முதல் சீசன் நிறைவடைந்த நிலையில், சில தினங்களிலேயே இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது.
முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த தொடர் இருந்தாலும் இதன் கேரக்டர்களின் பெயர்கள் மட்டும் நீடித்து வருகிறது.
காதலை நிரூபிக்க மழையை வரவழைத்த பாரதி: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் பாரதி கண்ணம்மா தொடருக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. இந்தத் தொடர் முதலிடத்தில் தொடர்ந்து இருந்த நிலையில், தொடரில் ஹீரோயின் மாற்றம், ஒரே மாதிரியான கதைக்களம் உள்ளிட்டவற்றால், இந்தத் தொடர் கீழிறங்கியது. தொடர்ந்து கதையில் சுவாரஸ்யத்தை கூட்ட என்னென்னவோ செய்து பார்த்த இயக்குநர், ஒரு கட்டத்தில் கதையை நிறைவு செய்தார்.
இந்தத் தொடர் நிறைவடைந்த சில தினங்களிலேயே இரண்டாவது சீசனும் துவங்கப்பட்டது. முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் இந்தத் தொடர் தற்போது அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொடரின் புதிய நாயகனாக சிபு சூர்யா, பாரதியாக நடித்து வருகிறார். மற்றபடி கண்ணம்மா, வெண்பா, சவுந்தர்யா என முதல் சீசன் நடிகர்களே இதிலும் முக்கியமான கேரக்டர்களில், அதே பெயரில் நடித்து வருகின்றனர்.
கண்ணம்மாவை காதலிக்கும் பாரதி, அவரது சம்மதம் பெறுவதற்காக அதிகமான முயற்சிகள் எடுக்கிறார். ஆனாலும் கண்ணம்மா மனமிறங்காத நிலையில், ஒரு கட்டத்தில் அவர் தனது காதலை ஏற்காத காரணம் குறித்து கேட்க, தான் ஒரிஜினல் கண்ணம்மா இல்லை என்றும் சித்ரா என்றும், சிறையில் இருந்தவர் என்பதையும் அவர் பாரதியிடம் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்தாலும், அவரை தொடர்ந்து காதலிக்கிறார் பாரதி.
இந்நிலையில், பாரதியின் காதலை தான் ஏற்காதற்கு தன்னுடைய தந்தையும், பாரதியின் தாயும்கூட முக்கியமான காரணம் என்பதையும் கண்ணம்மா கூற, தாங்கள் இருவரும்தான் திருமணம் செய்யப் போகிறோம் என்பதையும் பெரியவர்களின் ஆசை, இதில் எந்தவகையிலும் தடை போட முடியாது என்பதையும் பாரதி கண்ணம்மாவிற்கு புரிய வைக்கிறார். ஆனாலும் பாரதியின் காதலை கண்ணம்மா ஏற்காமல் போக்கு காட்டி வருகிறார்.
இந்நிலையில் வழியில் கண்ணம்மாவை மறிக்கும் பாரதி, தன்னுடைய காதல் உண்மையானது என்றும், இந்த பிரபஞ்சமே இருவரையும் சேர்த்து வைக்கும் என்றும் கூறுகிறார். இதையடுத்து பாரதி மழை வரும் என்றால் மழை பெய்துவிடுமா என்று சித்ரா கேள்வி கேட்கிறார். தொடர்ந்து கடவுளிடம் தன்னுடைய காதலை நிரூபிக்க மழை வேண்டி பிரார்த்தனை செய்கிறார் பாரதி. இதையடுத்து மழை பெய்கிறது. இதையடுத்து தன்னுடைய காதலை தற்போது ஏற்றுக் கொள்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார் பாரதி.
கண்ணம்மாவாக மாறியுள்ள சித்ராவிற்கும் பாரதி மீது ஈர்ப்பு காணப்படுகிறது. ஆனாலும் தன்னுடைய தந்தையின் சொல் மற்றும் சவுந்தர்யாகவின் ஆசை போன்ற காரணங்களால் அவரது காதலை ஏற்க முடியாமல் தவிக்கிறார். அவர் பாரதியின் காதலை ஏற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது. ஆனாலும் சொன்னவுடன் மழையை வரவைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.