சென்னை: G.V.Prakash (ஜிவி பிரகாஷ்) அமித்ஷாவை ஜிவி பிரகாஷ் சந்தித்த பிறகு அவரை வாடிவாசல் படத்திலிருந்து நீக்குவதற்கு வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வெற்றிமாறன் கடைசியாக விடுதலை படத்தை இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் அந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்தில் நடித்த சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதேபோல் இளையராஜா இசையை ஒருதரப்பினர் பாராட்ட சிலர் விமர்சிக்கவும் தவறவில்லை. எது எப்படியோ படத்தை பலரும் ரசிக்க செய்தனர் என்பது நிதர்சனம்.
இரண்டாம் பாகம்: விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றிமாறன் ஏற்கனவே ஷூட் செய்து முடித்துவிட்டார். ஆனால் முதல் பாகத்துக்கு வந்த விமர்சனத்தை அவர் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இரண்டாவது பாகத்தை இன்னும் பட்டை தீட்ட வேண்டும் என முடிவு செய்து மேலும் சில நாட்கள் படத்துக்கான ஷூட்டிங்கை மீண்டும் வைத்திருக்கிறார். எனவே அதன் ரிலீஸில் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது.
வாடிவாசல்: இதற்கிடையே அசுரன் படத்தை முடித்த பிறகே சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் கமிட்டானார் வெற்றி. சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை மையப்படுத்தி அந்தப் படம் உருவாகவிருக்கிறது. கலைப்புலி தாணு படத்தை தயாரிக்கிறார். இதற்கான டெஸ்ட் ஷூட் பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த வீடியோ இணையத்தில் படு ட்ரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
வாடிவாசல் திறக்குமா திறக்காதா?: ஆனால் இடையில் விடுதலை படத்துக்கு வெற்றிமாறன் செல்ல அங்கு அவர் லாக் ஆகிவிட்டார். இருப்பினும் வாடிவாசலுக்கான் சிஜி பணிகள் எல்லாம் லண்டனில் ஜரூராக நடந்துவருவதாகவும் படம் நடப்பது உறுதி என்றும் கலைப்புலி தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன. இருப்பினும் அதற்கு பிறகு படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. எனவே வாடிவாசல் திறக்குமா திறக்காதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழ ஆரம்பித்துவிட்டது.
ஜிவி பிரகாஷ்: படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏறகனவே வெற்றிமாறனும் அவரும் இணைந்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் தரமாக இருந்தன. எனவே வாடிவாசலிலும் அந்தக் கூட்டணி தரமான இசையை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது படத்திலிருந்து ஜிவி பிரகாஷை நீக்கிவிடலாமா என்ற யோசனையில் வெற்றிமாறன் இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன காரணம்: அதாவது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தமிழ்நாடு வந்தார். அப்போது அவரை ஜி.வி. பிரகாஷ் சந்தித்தார். அந்த சந்திப்பில் தமிழ் மொழிக்கும், தமிழ் இன மக்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் அவர் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆனால் இந்தச் சந்திப்பினால் வெற்றிமாறனுக்கு வருத்தம் ஏற்பட்டுவிட்டதாகவும் எனவே வாடிவாசல் படத்திலிருந்து ஜிவி பிரகாஷை நீக்கி விடலாமா என்ற யோசனையில் அவர் இப்போது இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.