புதுடில்லி, கொரோனா தடுப்பூசி விபரங்கள் அடங்கிய, ‘கோ – வின்’ இணையதளத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, பீஹாரைச் சேர்ந்த ஒருவரை, புதுடில்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தொடர்பான தகவல்கள், கோ – வின் இணையதளத்தில் சேகரிக்கப்படுகின்றன. இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களை திருடி, ‘டெலிகிராம்’ தகவல் பரிமாற்ற செயலியில் வெளியிடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
ஆனால், இதை மத்திய அரசு மறுத்தது. ‘கோ – வின் இணையதளம் மற்றும் அதன் செயலிகள் முழு பாதுகாப்பானவை. ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண்ணை செலுத்தியே, ஒருவர் தன்னுடைய விபரங்களை பார்க்க முடியும்.
‘இணையதளத்தில் இருந்து தகவல்களை திருட முடியாது’ என, மத்திய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, புதுடில்லி போலீசின் சிறப்பு பிரிவு விசாரித்து வருகிறது.
இதையடுத்து, பீஹாரைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாக சிறப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரின் தாய், சுகாதாரப் பணியாளராக உள்ளார். அவருடைய உதவியுடன், கோ – வின் தளத்துக்குள் நுழைந்து இந்த நபர் தகவல்களை திருடிஉள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement