வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: கோழியின், ‘செல்’களை சோதனை கூடங்களில் வைத்து வளர்த்து அதில் இருந்து உருவாக்கப்படும் இறைச்சியை சந்தையில் விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
தயாரிக்கும் முறை:
சைவ – அசைவ உணவு வகைகளை தாண்டி, இறைச்சி மற்றும் பால் பொருட்களை தவிர்க்கும், ‘வேகன்’ என்ற உணவு முறை உலகம் முழுதும் வளர்ந்து வருகிறது. இந்த உணவுமுறை, சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்திற்கும் சிறப்பான பலனை தரும் என, இதை பின்பற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், செயற்கை முறையில் இறைச்சி தயாரிக்கும் சந்தையும் வளர்ச்சி அடைய துவங்கி உள்ளது. அதாவது, ஒரு விலங்கின், ‘செல்’களை சோதனை கூடத்தில் வைத்து பராமரித்து வளர்த்து, அதை இறைச்சியாக தயாரிக்கும் முறையை தான், சோதனைக்கூட இறைச்சி என அழைக்கின்றனர்.
இந்த வகையில், அமெரிக்காவில் சோதனைக்கூட கோழி இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோழிக்கு உயிர் கிடையாது. ‘செல்’களை வைத்து கறிக்கு தேவையான பாகங்களை மட்டும், தேவையான வடிவத்தில் உருவாக்கிக் கொள்கின்றனர்.
இந்த சோதனைக்கூட கோழி இறைச்சியை சந்தையில் விற்பனை செய்ய, அமெரிக்க விவசாயத்துறை அனுமதி அளித்துள்ளது. ‘அப்சைட் புட்ஸ்’ மற்றும் ‘குட் மீட்’ என்ற இரு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை சிக்கல்:
‘சோதனைக் கூடங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை அனைவரும் சாப்பிடலாம். இதில், புரதச் சத்து உள்ளது. தீங்கு இழைக்காது. விலங்குகளை கொல்கிறோம்; சுற்றுச்சூழலை அழிக்கிறோம் என்ற குற்ற உணர்வும் இருக்காது’ என, அந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த இறைச்சி விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. அதே நேரம், இதற்கு எதிராகவும் அமெரிக்காவில் குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன.
சோதனைக்கூட இறைச்சி உருவாக்க அதிக கால அவகாசம் தேவைப்படும் என்பதால் அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘மிக வேகமாக வளர்ந்து வரும் இவ்வகை கோழி இறைச்சி தயாரிப்பு, வரும் 2030ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள துறையாக வளர்ச்சி அடையும்’ என, அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement