ஒன் பை டூ: “கைதான செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் தக்கவைப்பது சரியா?”

கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

“ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர்களை கருணாநிதி தனது அமைச்சரவையிலிருந்து நீக்கிய வரலாறு உண்டு. ஆனால், இன்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்பும், அமலாக்கத்துறை கைதுசெய்த பின்பும் அமைச்சராகத் தக்கவைக்கப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. அவர் வாய் திறந்தால் ஒட்டுமொத்த தி.மு.க அரசும் காலியாகிவிடும் என்ற அச்சத்தாலேயே அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கத் தயங்குகிறார்கள். ஆகவேதான் விழுந்தடித்துக்கொண்டு அவரை ஒட்டுமொத்த தி.மு.க-வும் காப்பாற்றுகிறது. செந்தில் பாலாஜி விசாரணையின்போது வாய் திறந்துவிடக் கூடாது என்பதற்காக அடுத்தடுத்து பல நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். வேண்டுமென்றால் பாருங்கள்… அமலாக்கத்துறை விசாரிக்கவிருக்கும் எட்டு நாள்களும் அவர் ஐ.சி.யூ-வில்தான் இருப்பார். மீண்டும் அனுமதி பெற்று விசாரிக்க வந்தால், வேறொரு பிரச்னையைச் சொல்லி மறுபடியும் ஐ.சி.யூ-வுக்குச் சென்றுவிடுவார். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சரானதற்கு ஊழல் குற்றச்சாட்டுதான் காரணம் என்பது ஊருக்கே தெரியும். நாளையே அவருக்கு மீண்டும் இலாகா ஒதுக்கப்பட்டால், ஊழல் செய்து சம்பாதித்த பணத்தைத் தலைமைக்கும் முறையாகக் கொடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்மையாகும்.’’

கோவை சத்யன், தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலர், தி.மு.க

“அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துக்காக அமலாக்கத்துறையை அனுப்பி, கைதுசெய்திருக்கிறது மத்திய அரசு. தனிநபர் பகையையும், ஒரு கட்சியினுடைய சித்தாந்தப் பகையையும் கொண்டு, பழிவாங்கப்படுகிறார் செந்தில் பாலாஜி. 33 ஒன்றிய அமைச்சர்கள்மீதும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களோடு சேர்த்து ஊழல் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. அது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்களை, `பதவி விலகுங்கள்’ என ஏன் யாரும் சொல்லவில்லை… கொங்கு மண்டலம் முழுக்க அ.தி.மு.க கோட்டை என்ற நிலைமையைத் தகர்த்தெறிந்தவர் செந்தில் பாலாஜி. ஆகவேதான் அ.தி.மு.க-வை வைத்து தமிழக அரசியலில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் பா.ஜ.க-வினர், செந்தில் பாலாஜியை முடக்கத் துடிக்கிறார்கள். இதுவரை செந்தில் பாலாஜி குற்றவாளி என எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை. அவர் வழக்கை எதிர்கொள்வார். அவர்மீதான தீர்ப்பின் அடிப்படையில் கட்சித் தலைமையே நடவடிக்கை எடுக்கும். ஆனால், அரசியல் பழிவாங்கலுக்காக எங்கள் அமைச்சர் ஒருவரை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.