மணிப்பூர் வன்முறை.. அமித்ஷா தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. முக்கிய முடிவு என்ன?

இம்பால்: மணிப்பூர் வன்முறை தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி பங்கேற்கிறார். இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத்தெரிகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூரை பொறுத்தவரை அங்கு பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். கடந்த மே மாதம் 3ம் தேதி மணிப்பூரில் வசிக்கும் குக்கி- மைத்தேயி இனமக்களிடையேயான வன்முறை வெடித்தது. பழங்குடியின மக்கள் பட்டியலில் குக்கி இன மக்கள் இருக்கும் நிலையில், தங்களையும் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க மைத்தேயி குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை தான் வன்முறையாக மாறியது. மணிப்பூரில் பல இடங்களில் வன்முறை தாண்டவம் ஆடியது. இந்த வன்முறையில் 120 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பல அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இணையதள துண்டிப்பு முதல் அமைதி பேச்சுவார்த்தை வரை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அமைதி திரும்பிய பாடில்லை. குறிப்பாக வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முடிவுகள் அனைத்தும் பலன் கொடுக்கவில்லை. கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் சென்றார்.

மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற்காக 4 நாட்கள் தங்கியிருந்து குல்கி மற்றும் மைத்தி இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அனைத்து கட்சி கூட்டம் இன்று 24ம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மணிப்பூர் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. தொடர் வன்முறையின் காரணமாக மணிப்பூரில் முதல்வர் பீரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரதமர் மோடி நாட்டில் இல்லாத நேரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமா? என தெரியவில்லை.

இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இதனை மத்தியில் ஆளும் பாஜக அரசும் நிராகரிக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி ஆலோசனை நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படுமா? என்று தெரியவில்லை. எனினும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி என்பது தேவையற்றது என்று கூறியிருந்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.