இமாச்சலப் பிரதேச கனமழை: மண்டி – குலு சாலையில் 20 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசல்!

மண்டி: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சண்டிகர் – மணாலி நெடுஞ்சாலையில் மண்டி – குலு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டது. இந்தச் சூழலில், அந்தச் சாலையில் சுமார் 20 மணி நேரமாக நீடித்து வந்த போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தற்போதைக்கு இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மண்டியில் இருந்து மணாலி வரையிலான சாலையில் போக்குவரத்து மேற்கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இமாச்சலப் பிரதேசத்தில் கன மழை காரணமாக மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் திட்டமிடும்படி மாநில சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

அந்த மாநிலத்தில் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்துக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மண்டியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தகவலின்படி, சுமார் 83 சாலைகள் மற்றும் 2 தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அதில் 35 சாலைகள் மண்டி பகுதியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ள காரணத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் சாலையில் அப்படியே நிற்பதாக காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சாகர் சந்தர் தெரிவித்துள்ளார். சாலையில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரவோடு இரவாக சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாலையில் தவித்து வரும் மக்களுக்கு உள்ளூர் மக்களின் துணையுடன் வேண்டிய உதவிகள் வழங்கப்பட்டது. போக்குவரத்து தடைபட்ட காரணத்தால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாலையில் பல மணி நேரங்கள் சிக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையினைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பியாஸ் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்தது. மாநிலத்தின் தலைநகர் சிம்லா உட்பட பிறபகுதிகளிலும் மழைப் பொழிவு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.