உலகளவில் அதிமுகவுக்கு 7ஆவது இடம்: பெருமையுடன் பகிரும் ரத்தத்தின் ரத்தங்கள்!

உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட 15 கட்சிகளின் பட்டியலை World updates என்ற அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை சீன கம்யூனிச கட்சி பெற்றுள்ளது. நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு 9ஆம் இடமும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 14ஆவது இடமும் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “World updates தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஏழாம் இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்டு, மாபெரும் எஃகு கோட்டையாக உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு எடப்பாடியார் அவர்கள் தலைமையில் வீறுநடை போட்டு வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது.

கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, மக்கள் நலன் சார்ந்து மக்களுக்காகவே முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய இயக்கம் அஇஅதிமுக என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் தங்கள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது. ஜூன் 3ஆம் தேதிக்கு கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வலியுறுத்தி உறுப்பினர் அட்டைகளை நிர்வாகிகளிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.