சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் இன்னும் 2 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கை ஜூலை 17-ம் தேதிக்கு தள்ளிவைத்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-ல் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சட்டவிரோதமாக குட்காவை விற்பனை செய்ய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை, யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய டைரி ஒன்றும் அதிகாரிகளிடம் சிக்கியது.
இந்த சர்ச்சையில், அப்போது அதிமுக அமைச்சரவையில் இருந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிக வரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில், இந்த வழக்கை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக, கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 2021-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெறாதது சர்ச்சைக்குள்ளானது.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும்அதிகாரிகள் ஏ.பழனி, பி.செந்தில்வேலவன் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, தமிழக அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது.
அதன்படி, சிபிஐ அதிகாரிகள் இந்த 11 பேருக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பரில் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் பல்வேறு பிழைகள் இருந்ததாலும், ஒப்புதல் கடிதம் மற்றும் சாட்சிகள் குறித்த விவரங்கள் தெளிவாக இல்லாதலும், முழு விவரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் தெளிவாக கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி மலர் வாலண்டினா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு 9 முறை விசாரணைக்கு வந்தபோதும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத் தில் தெரிவித்து வந்தனர்.
இந்த வழக்கு 10-வது முறையாக நேற்று சிபிஐ நீதிபதி மலர் வாலண்டினா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் இன்னும் 2 பேருக்கு எதிராக மட்டும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதிக் கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப் பத்திரிகை இன்னும் தயாராகவில்லை என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, நீதிபதி வழக்கை ஜூலை 17-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.