சென்னை: தொலைக்காட்சிகளில் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ரோபோ சங்கர் என பல நட்சத்திரங்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் தான்.
அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல பாடகர்களும் அறிமுகமாகியுள்ளனர்.
சூப்பர் சிங்கர் 9வது சீசன் நேற்று நிறைவுப் பெற்ற நிலையில், இத்துடன் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முடிவுக்கு வருகிறதா சூப்பர் சிங்கர்: விஜய் டிவியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் ரொம்பவே முக்கியமானது. திறமையான பாடகர்களை அறிமுகப்படுத்தும் மிகப் பெரிய மேடையாக இந்நிகழ்ச்சி காணப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் சூப்பர் சிங்கர் சீனியர், சூப்பர் சிங்கர் ஜூனியர் என இருபிரிவுகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஏராளமான பாடகர்கள் திரையுலகை கலக்கி வருகின்றனர். சாய் சரண், அஜிஸ், நிகில் மேத்யூ, செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி, திவாகர், ரக்ஷிதா, ஸ்ரீனிசா, பூவையார் என இன்னும் ஏராளமான பாடகர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மா.கா.பா ஆனந்த், பிரியங்கா ஆகியோரும் மக்களிடம் பிரபலமாகியுள்ளனர்.
இளையராஜா, ஏஆர் ரஹ்மான், அனிருத், யுவன், சந்தோஷ் நாராயணன், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் ஃபேவரைட்டான இசை நிகழ்ச்சியாக இது கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹாரிஸ் ஜெயராஜ் நடுவராக பங்கேற்றார்.
இதில் அபிஜித், பூஜா, அருணா, ப்ரியா, பிரசன்னா ஆகிய 5 பேருக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இறுதியாக இதில் அருணா வெற்றிப் பெற்று 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டை பரிசாக தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து ப்ரியா ஜெர்சன், பிரசன்னா, பூஜா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். அனைவருக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இந்த 9வது சீசனோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின. விஜய் டிவியின் டிஆர்பி கிங்காக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் முடிவுக்கு வருகிறதா என ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரித்து வந்த Media Masons என்ற நிறுவனம், இந்த சீசனோடு விலகுகிறார்களாம். அவர்களுக்கு பதிலாக வேறொரு தயாரிப்பு நிறுவனம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடருவார்கள் என சொல்லப்படுகிறது.