சென்னை: ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசாக கொடுத்த காரின் விலையை கேட்டு ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.
கோவையைச் சேர்ந்த 24 வயதே ஆன ஷர்மிளா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பேருந்தில் முதல் பெண் ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டார்.
அப்பொழுது ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை என சமூகம் கருதும் ஓட்டுநர் வேலையை ஒரு பெண் துணிச்சலுடன் செய்வதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டினார்கள்.
குவிந்த பாராட்டு: ஷர்மிளா பேருந்து ஓட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையம், ஊடகம் மற்றும் பத்திரிக்கையில் பகிரப்பட்டு வைரலானதை அடுத்து, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
பணியில் இருந்து நீக்கம்: இதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை பேருந்தில் ஏறி பயணித்தபடியே சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ந்த ஒரு சில மணி நேரத்தில் பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து ஷர்மிளா நீக்கப்பட்டார். ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்த கனிமொழி பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை செல்போனில் அழைத்து,பேருந்து உரிமையாளரிடம் பேசி வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால், அதற்கு ஷர்மிளா மறுப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்ட இருப்பதாக கூறியிருந்தார்.
கமல்ஹாசன் பாராட்டு: இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு சொந்தமாக தொழில் செய்ய மாருதி சுஸூகி நிறுவனத்தின் எர்டிகா காரை பரிசாக அளித்துள்ளார். ஓட்டுநர் ஷர்மிளா பெற்றோருடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து காரை பெற்றுக்கொண்டார். ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல, தன் வயதையொத்த பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழக்கூடியவர் என்று கமல் அவரை வெகுவாக பாராட்டி இருந்தார்.
காரின் விலை: இந்த காரின் விலையை பொறுத்தவரை பெட்ரோல் வேரியன்ட் ரூ 9.75 லட்சம் என்ற விலையிலும், சிஎன்ஜி வேரியண்ட் ரூ 10.70 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்த தகவலின் படி நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு ரூ 10 லட்சம் விலையிலான காரை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.