கோவை பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்
கோவையை சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு கார் பரிசாக வழங்கி உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
கோவை மாவட்டம் காந்திபுரம் – சோமனூர் வழித்தடத்தில் ஓடும் தனியார் பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என பலரும் பாராட்டினர். பல அரசியல் பிரமுகர்களும் இவரது பேருந்தில் பயணித்து வருகின்றனர். கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுக்க பிரபலமாகி உள்ளார் இவர். கடந்தவாரம் திமுக எம்.பி., கனிமொழி ஷர்மிளா ஓட்டி சென்ற பேருந்தில் பயணித்ததுடன் அவரை பாராட்டினார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் – உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு பதிலளித்த பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன், 'ஓட்டுநர் ஷர்மிளாவை பணியில் இருந்து நாங்கள் விலக சொல்லவில்லை, அவராகவே பணி செய்ய விருப்பமில்லை எனக் கூறினார்' என விளக்கமளித்தார்.
இந்நிலையில் ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன். கமல் பண்பாட்டு மையம் சார்பில் இந்த கார் அளிக்கப்பட்டுள்ளது. பணியை இழந்த ஷர்மிளா வெறும் ஓட்டுநராக மட்டுமே இந்துவிட கூடாது, வாடகை கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை தொடர வேண்டும் என வாழ்த்தினார் கமல்.