புதுடெல்லி: இந்தியா அதன் எல்லைகளை காக்க உறுதியான ராணுவ நடவடிக்கைகளை எடுக்க தயங்காது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பேசினார்.
ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங் நேற்று பேசியதாவது: இந்தியா முன்பு இருந்தது போல் இல்லை. பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா வலுவடைந்து வருகிறது. தேவைப்பட்டால் எல்லை தாண்டிச் சென்று தாக்கும் திறனும் இந்தியாவிடம் உள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. அதற்கு, 2016-ல் எல்லையில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல்களே சான்று. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைக்கு உத்தரவிட பிரதமர் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். இது, அவரது வலிமையான சக்தியை காட்டுகிறது. நமது ராணுவம் பயங்கரவாதிகளை எல்லை தாண்டிச் சென்றும் அழித்தது.
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) வடகிழக்கின்பல பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நிரந்தர அமைதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. விரைவில், ஜம்மு-காஷ்மீரிலிருந்தும் அந்த சட்டம் அகற்றப்படலாம்.
பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக பயன்படுத்தும் நாடுகளின் (பாகிஸ்தான்) விளையாட்டு நீண்ட காலத்துக்கு நீடிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உலகின் பெரும்பாலான பெரிய நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் வெளியிட்ட கூட்டறிக்கை இந்தியா இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த உலகத்தின் மனநிலையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.
குறிப்பாக, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட ஐ.நா. பட்டியலிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த கூட்டறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதுடன் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அதேபோன்று, சீன எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதை நமது பாதுகாப்பு படை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக முறியடித்ததை நாம் மறந்துவிடக்கூடாது.
ஊழல் ஒழிப்பு: ஊழலை வெறும் பேச்சால் மட்டும் குறைத்துவிட முடியாது. அமைப்பில் மாற்றங்களை செய்வதன் மூலமாகவே ஊழலை குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.