சமையலுக்கான அத்தியாவசியமான காய்கறிகளில் தக்காளி, வெங்காயத்துக்கு எப்போதும் முதலிடம் தான். அதனால் மற்ற காய்கறிகளின் விலையேற்றத்தை விட இவைகளின் விலையேற்றம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து விடுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி, தற்போது 100 ரூபாயை கடந்த விற்பனையாகி வருகிறது. இது நடுத்தர குடும்பத்தின் பட்ஜெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி உணவகங்களின் உணவு பொருட்களின் விலையிலும் மாற்றத்தை கொண்டு வந்துவிடும். இதுபற்றி கோயம்பேடு காய்கறி சந்தையில் விசாரிக்கையில், காய்கறி வரத்து தொடர்ந்து குறைந்து வருவதை முக்கியமான காரணமாக கூறுகின்றனர்.
தக்காளி விலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நுகர்வோர்களுக்கு 65 பசுமை பண்ணை காய்கறி அங்காடி, நடமாடும் காய்கறி அங்காடி மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.