சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நிலவரம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. இங்கு நிர்ணயிக்கப்படும் விலை பல்வேறு மாவட்டங்களில் எதிரொலிக்கும். எனவே நாள்தோறும் கோயம்பேடு நிலவரத்தை வியாபாரிகளும், பொதுமக்களும் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் காய்கறி விலை ஏற்றம் என்ற தகவல் தமிழக மக்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
தக்காளி விலை உயர்வு
கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி, தற்போது 100 ரூபாயை கடந்த விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நடுத்தர குடும்பத்தின் பட்ஜெட்டில் மட்டுமின்றி, உணவகங்களின் உணவு பொருட்களின் விலையிலும் கைவைத்துள்ளது. இதுபற்றி கோயம்பேடு காய்கறி சந்தையில் விசாரிக்கையில், காய்கறி வரத்து தொடர்ந்து குறைந்து வருவதை முக்கியமான காரணமாக கூறுகின்றனர்.
கோயம்பேடு சந்தை நிலவரம்
வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை 90 ரூபாய்க்கும், சில்லறை விற்பனை 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் பீன்ஸ் 120 ரூபாய்க்கும், இஞ்சி 200 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும், அவரைக்காய் 7 ரூபாய்க்கும், பாகற்காய் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பருவமழை முக்கிய காரணம்
சுருக்கமாக சொல்லப் போனால் இல்லத்தரசிகள் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து விதமான காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். காய்கறி வரத்து குறைவிற்கு அண்டை மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.
அரசு நடவடிக்கை வேண்டும்
இது தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இப்படியே போனால் நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்பட நேரிடும். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு காய்கறி விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கிடையில் தமிழக அரசு முக்கியமான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பசுமை பண்ணை கடைகள்
அரசுக்கு சொந்தமான பண்ணை பசுமைக் கடைகளில் விலை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தக்காளி விலை 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த பண்ணை பசுமைக் கடைகளில் அரசே நேரடியாக கொள்முதல் செய்து காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.