பெங்களூரு: கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமாகியுள்ளதால் குடகு, ஷிமோகா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வறண்டு காணப்படுகின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத தால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது.
இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 77.68 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி அளவு நீர் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின்படி ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர்கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா – தமிழகம் இடையே நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் பிரச்சினை மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 106 அடியாக இருந்தது. இந்த ஆண்டு 77 அடி மட்டுமே இருக்கிறது.மைசூரு, மண்டியா விவசாயிகளின் பாசனத்துக்காக கால்வாய்களில் நீர் திறக்கப்படுவது முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 74 அடிக்கு கீழே குறைந்தால் பெங்களூரு, மைசூரு ஆகிய மாநகரங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதிலும் சிக்கல் ஏற்படும்’’ என்றனர்.