சென்னை:
தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை கைவிட்டால் நாம் தமிழர் கட்சி சீமானுடன் பேச தயாராக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் திமுகவுக்கு அடுத்தபடியாக ஒரு கட்சி பாஜகவை விமர்சிக்கிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். குறிப்பாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
, பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்களை கடுமையா விமர்சித்து வருபவர். குறிப்பாக, தமிழக அரசியல் களத்தில் எச். ராஜாவுக்கும், சீமானுக்கும் இடையேயான வார்த்தை போர் பயங்கரமாக இருந்த காலக்கட்டம் எல்லாம் உண்டு.
உதாரணமாக, சீமானை மனநோயாளி என்று எச். ராஜாவும், எச் ராஜாவை பைத்தியம் என சீமானும் மாறி மாறி விமர்சித்த சம்பவங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. இத்தனை நடந்த போதிலும், சீமானின் நாம் தமிழர் மீது பாஜகவின் பி டீம் என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் எச். ராஜா பேசினார். அப்போது அவர் சீமான் குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
சீமான் இன்று பேசக்கூடிய பல விஷயங்களை அவருக்கு முன்கூட்டியே நான் பேசியிருக்கிறேன். ஒருகாலத்தில் அவருடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. சமீபத்தில் சீமான் கூட பாஜகவை வரவேற்கிறேன் எனக் கூறியதாக செய்தித்தாள்களில் படித்தேன். தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை மட்டும் சீமான் கைவிட்டுவிட்டால் நாம் நெருங்கி வரலாம். தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதம். சீமான் எப்படி திராவிடம் என்ற கருத்தியலை ஏற்கவில்லையோ, அதுபோலவே பாஜகவும் அதை ஏற்கவில்லை.
சீமான் எனது நண்பர். அவருக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். தமிழ்தேசியம் பிரிவினைவாதத்தை விட்டுவிடுங்கள். நாம் தனித்தனியாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அவர் பகுத்தறிவுடன் சிந்தித்து தனது நிலைப்பாட்டை மாற்றினால் என்றால் அவருடன் பேச தயாராக இருக்கிறேன் என எச். ராஜா கூறினார்.