துரத்திய பகை… சிதைக்கப்பட்ட தலை; கடலூர் மதியழகன் கொலையின் பின்னணி இதுதான்!

கடலூர் தாழங்குடா மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் மனைவி சாந்தி, குண்டு உப்பளவாடி ஊராட்சி மன்றத்தின் தலைவர். இவர்கள் குடும்பத்துடன் செம்மண்டலம் பகுதியில் வசித்து வந்தனர். இன்று காலை மஞ்சக்குப்பத்தில் இருக்கும் சிவன் கோயிலில் சாமி கும்பிட்ட மதியழகன், தனது வீட்டுக்கு நடந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அரிவாள்களுடன் இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர், மதியழகனைச் சுற்றிவளைத்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட மதியழகன் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

ஆனாலும் அவரை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், முகத்தை மட்டும் குறிவைத்து சரமாரியாக வெட்டத் தொடங்கியது. அதனால் அடுத்த சில விநாடிகளில் முகம் முழுவதும் சிதைந்து, துள்ளத் துடிக்க உயிரிழந்தார் மதியழகன். அதையடுத்து அவர் முகத்தின் குறுக்கே ஒரு வீச்சரிவாளை சொருகி வைத்த அந்தக் கும்பல், கொலைக்குப் பயன்படுத்திய 7 வீச்சரிவாள்களை அங்கேயே வீசிவிட்டு தப்பியோடியது. ஒருசில நிமிடங்களில் நடந்த இந்தக் கொலையைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

கொலைசெய்யப்பட்ட மதியழகன்

மதியழகன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்த தகவல் தீயாகப் பரவியதால், அவர் ஆதரவாளர்களும், மனைவி, மகன் உள்ளிட்ட உறவினர்களும் அங்கு வந்து கதறியழுதனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்.பி ராஜாராம் தலைமையிலான போலீஸார், கூட்டத்தைக் கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தாழங்குடா மீனவ கிராமத்தில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

மதியழகன் கொலையின் பின்னணி என்ன?

கடலூர், குண்டு உப்பளவாடி ஊராட்சியில் அமைந்திருக்கும் தாழங்குடா மீனவ கிராமத்தில், 2019-ம் ஆண்டு இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் முன்னாள் ஊராட்சித் தலைவர்களான மாசிலாமணியும், மதியழகனும் தலைவர் பதவிக்கு தங்கள் மனைவிகளை வேட்பாளர்களாக நிறுத்தினார்கள்.

அந்த தேர்தலில் மதியழகனின் மனைவி சாந்தி வெற்றிபெற்றுவிட, மாசிலாமணியின் மனைவி பிரவினா தோல்வியடைந்தார். அதன்பிறகு அவ்வப்போது இரு தரப்பினருக்கும் உரசல் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றுக்கு கிருமி நாசினி தெளிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலையடுத்து மதியழகன், மாசிலாமணி உள்ளிட்ட இரு தரப்பினரைச் சேர்ந்த 30 பேர்மீது 307 கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்ததுடன், சமாதானப் பேச்சுவார்த்தையையும் நடத்தி வைத்தது காவல்துறை.

ஆனாலும் அவர்களுக்குள் இருந்த பகை புகைந்து கொண்டிருந்தது. அதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தன் 5 வயது மகனுடன் அதே ஊரில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்ற மாசிலாமணியின் தம்பி மதிவாணனை ஈட்டி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தது, தற்போது கொலைசெய்யப்பட்ட மதியழகனின் தரப்பு. அப்போது ஏதோ பிரச்னை என்று உணர்ந்துகொண்ட மதிவாணன் தன்னுடைய மகனை இருசக்கர வாகனத்திலேயே அமர வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

ஆனால் சிறிது தூரத்திலேயே அவரை சுற்றிவளைத்த மற்றொரு கும்பல், நிதானமாக அரிவாள்களால் வெட்டி துள்ளத் துடிக்க படுகொலை செய்தது. அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறையில் 25-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள், சுருக்கு வலைகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், வீடுகள் என தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அந்தச் சம்பவத்தில்  மாசிலாமணி தரப்பில் 25 பேர்மீதும், மதியழகன் தரப்பில் 18 பேர்மீதும் வழக்கு பதிவுசெய்த போலீஸ், கொலை வழக்கில் மதியழகன் உள்ளிட்ட 14 பேரைக் கைதுசெய்தது.

மாசிலாமணி

அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த மதியழகனுக்கு ஊருக்குள் நுழைய தடைவிதித்தது போலீஸ். அதனால்தான் செம்மண்டலம் பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார் மதியழகன். இந்த நிலையில்தான், இன்று காலை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் மதியழகன். தன் தம்பி கொலைக்குப் பழிவாங்குவதற்காக மதியழகனை மாசிலாமணி தரப்பு கொலைசெய்திருப்பதாக தெரிவிக்கும் போலீஸார், கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும் அதை உறுதிப்படுத்துகின்றன என்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.