சென்னை: “இனிமேல் தமிழகத்தில் சினிமாவிலிருந்து வந்த ஒருவர் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. அது நடக்கும் எனவும் எனக்குத் தோன்றவில்லை” என ஆடிட்டர் குருமூர்த்தி க்ருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த ‘Ajay to yogi adithyanath’ என்ற புத்தகத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு அவரைப் பற்றி தெரியவே தெரியாது. சினிமா பற்றியே எனக்கு தெரியாது, அப்படியிருக்கும்போது அவரைப் பற்றி எனக்கு எப்படி தெரியும்?
இனிமேல் தமிழகத்தில் சினிமாவிலிருந்து வந்த ஒருவர் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. அது நடக்கும் என எனக்கு தோன்றவில்லை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கினார் என்றால், அதற்கு காரணம் திமுகவில் 30 ஆண்டுகள் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் இருந்தது. அவர்கள் திமுகவுடன் பணியாற்றி, அரசியலை முழுமையாக தெரிந்து வைத்திருந்தனர். திமுகவுக்குள்ளேயே அதிமுக இருந்தது. அதனால் அவர் அதிமுகவை உருவாக்கும்போது அதிமுக ரெடியாக இருந்தது.
இப்போது நீங்கள் உங்களின் ரசிகர்களை வைத்து கூட்டம்போட்டால் அது எடுபடாது. இதே பிரச்சினைதான் ரஜினிக்கும் வந்தது. ஒரு கூட்டத்தை அமைப்பாகவோ, கட்சியாகவோ மாற்ற முடியாது. இந்த வாரம் துக்ளக்கில் அதைத்தான் எழுதியிருக்கிறேன்.
பாட்னாவில் கூடியதே ஒரு கூட்டம் அது கூட்டணியாக மாறுமா என்பதே கேள்விக்குறி. 15 பேர் சேர்ந்து கூட்டணி உருவாகும் என்பதே கஷ்டம் எனும்போது, 10 லட்சம் பேர் சேர்ந்து ஒரு கட்சியை உருவாக்குவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது உங்களுக்கு தெரியும். அதனால், இந்த முயற்சிகளெல்லாம் பெரிய அளவில் வெற்றியடையாது.
கொள்கையின் அடிப்படையில் ஒரு கட்சி உருவாகி முன்னேறி வருவதற்கு 20, 30 வருடங்கள் ஆகும். இப்படியெல்லாம் இல்லாமல் ஒரு கும்பலை வைத்து ஒருவர் திடீரென ஆட்சியை பிடிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அவருக்கு தன்னம்பிக்கை அதிகம் என்றுதான் சொல்வேன்” என்றார்.