சென்னை:
பக்ரீத் பண்டிகைக்காக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதுதிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பக்ரீத் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத்தும் ஒன்று. இந்த நாளில் முஸ்லிம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்கள் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை (ஜூன் 28) சென்னையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு முக்கிய மாவட்டங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, பக்ரீத் பண்டிகைக்காக நாடு முழுவதும் பல சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு நாளை சிறப்பு ரயில் புறப்படவுள்ளது குறிப்பிடத்க்கது.