லக்னோ: கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ஷார்ஜாவுக்கு பிரசித்தி பெற்ற பனார்சி லாங்டா மாம்பழங்கள் நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்கு முன்னர் மாம்பழங்களின் தரத்தை யோகி ஆதித்யநாத் பரிசோதித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாடு வளர்ச்சி மற்றும் செழுமையின் புதிய உயரங்களை எட்டி வருகிறது. தற்போது விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஆனால் இதற்கு பின்னால் பிரதமர் பசல் யோஜ்னா (பயிர் காப்பீடு திட்டம்) போன்ற ஏராளமான முயற்சிகள் இருக்கின்றன. வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான வசதிகளை அதிகரிக்க உத்தரப் பிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் வாரணாசியில் இருந்து பழங்களின் ஏற்றுமதி தொடங்கியது, ஆனால் மாவட்டத்தில் அப்போது பேக் ஹவுஸ் இல்லை. ஆனால் பெரும் முயற்சிக்கு பின்னர் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் வாரணாசி, லக்னோ, சஹாரன்பூர் மற்றும் அம்ரோஹா ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த பேக் ஹவுஸ்கள் கட்டப்பட்டன. இந்த பேக் ஹவுஸ் இருப்பதால்தான் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகிறது.
தற்போது உத்தரப் பிரதேசத்தில் இருந்து ₹ 19000 கோடி மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம். விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு. எனவே இதை பாதுகாப்பதில் பாஜக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. இனி வரும் காலங்களில் விவசாயிகளின் வருமானம் மேலும் அதிகரிக்கும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும்” என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.