போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி முத்தலாக் ஆதரிப்பு மற்றும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போரை கடுமையாக சாடினார். அதோடு பொது சிவில் சட்டத்துக்கு ஏன்? என்பது பற்றியும் விளக்கம் அளித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி மத்திய பிரதேசத்துக்கு இன்று சென்றார்.
அங்கு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு போபாலில் இன்று பாஜக கட்சி நிர்வாகிகளுடன், பூத் பணியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இந்த வேளையில் கட்சி நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். இந்த வேளையில் முத்தலாக் மற்றும் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள் குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு அநீதி இழைக்கிறார்கள். மேலும் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இன்று சிலர் மக்களை தூண்டுகின்றனர். ஒரு நாட்டை எப்படி 2 சட்டங்கள் கொண்டு நடத்த முடியும்?.
அரசியலமைப்பு சட்டம் என்பது சமஉரிமை பற்றி பேசுகிறது.
உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ளது. பொது சிவில் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சியினர் விளையாடுகின்றனர். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினர் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்
எந்த மதம், சமூகத்தை சேர்ந்த மக்களும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்க கூடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் கூட பொது சிவில் சட்டத்தை எதிர்க்க கூடாது. நாட்டில் வாக்குவங்கி அரசியல் செய்பவர்களால் பாஷ்மாண்டா முஸ்லிம் மக்களின் வாழ்க்கை கடினமாதாக மாறி இருக்கிறது. அவர்கள் சமமாக நடத்தப்படாத நிலை உள்ளது. அவர்கள் சொந்த சமூகத்தை சேர்ந்தவர்களாளே சுரண்டப்படுகின்றனர்” என்றார்.
பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்துவது என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்பு மீண்டும் தொடங்கி உள்ளது. ஏற்கனவே ஒரு முறை கருத்து கேட்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இது 2வது முறையாக நடக்கிறது.
இதுதொடர்பாக மத்திய சட்டகமிஷன் கடந்த 14ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 30 நாட்களில் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மதஅமைப்பினர் தங்களின் கருத்துகளை பதிவு செய்யலாம் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்து இன்று பேசியுள்ளார்.
மேலும் இந்த கலந்துரையாடலின்போது பிரதமர் மோடி நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுபற்றி அவர் ‛‛இன்று இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பணவீக்க விகிதம் என்பது நாட்டில் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது. கொரோனா பிரச்சனையில் இருந்து நாடுகள் மீண்ட நிலையில் போர் (உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்) தொடங்கியது. இத்தகைய சூழலிலும் கூட பணவீக்கத்தின் அளவை கட்டுக்குள் வைத்துள்ளோம்” என்றார்.