தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்தவர் முன்னாள் முதல்வர் ’கலைஞர் கருணாநிதி’. அவரின் நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.81 கோடி. பேனா சின்னம் அமையும் இடத்திற்கும் கலைஞர் நினைவிட வளாகத்திற்கும் இடையில் கடற்கரையில் 290 மீட்டரும், கடலுக்குள் 360 மீட்டர் நீளத்துக்குமான 9 மீட்டர் அகலம் கொண்ட பாலம் அமையவுள்ளது . இந்தப் பாலம் கடற்கரை மட்டத்தில் இருந்து சுமார், 6 மீட்டர் உயரத்தில் அமையும். கடலுக்குள் பேனா நினைவு சின்னமானது, 42 மீட்டர்(137 அடி) உயரத்தில் அமைக்கப்படும். இதற்கு அனுமதி பெற கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், இடர் மதிப்பீடு மற்றும் பேரிடர் மேலாண்மை திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மக்களின் கருத்துக்கள் கேட்காமல் திட்டத்தை தொடங்கக் கூடாது என மத்திய கடல்சார் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ’31.1.2023’ அன்று நடந்தது. இதை மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூட்டத்தை நடத்தியது. இதில் 1500-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். ஆனால் இது மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டமாக நடத்தாமல், திமுக கட்சிக் கூட்டம் போல நடந்ததாக, கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கட்சியினர் விமர்சித்தனர்.
இது ஓய்வதற்குள், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருந்த கருத்துகேட்பு விவரங்கள் மாற்றியிருப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசிய 34 பேரின் கருத்துக்களின் விவரங்களை மட்டுமே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொகுத்துள்ளது. ஆனால் அதில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
குறிப்பாக, மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி விமர்சித்த வாக்கியங்கள் நீக்கப்பட்டு, அவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது போல் கருத்து திரிக்கப்பட்டிருந்தது. இதைக் குறிப்பிட்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதியிடம் புகாரும் தெரிவித்திருந்தார் திருமுருகன் காந்தி. ஆனால், அதற்கு எந்த விளக்கத்தை அரசு தரப்பு கூறவில்லை.
ஆனால், இந்தத் திட்டத்தை கடலில் அமைக்க மத்திய கடல்சார் மேலாண்மை ஆணையம் 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருக்கிறது.இது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை குறிப்பிட்டதாவது, “கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஒன்றியக் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கும், சூழலியல் நலனுக்கும் எதிரான செயலாகும். மக்களாட்சி முறைக்கு எதிராக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது, நடப்பது மக்களாட்சியா? எதேச்சதிகார ஆட்சியா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இத்திட்டதினை திமுக அரசு, ஒன்றிய பாஜக அரசு கடலுக்குள் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறையைப் பலவீனப்படுத்தும் வழியாக கொண்டுவந்த சட்ட திருத்தத்தின் உதவியோடு முன்மொழிந்து, அதே ஒன்றிய அரசின் அனுமதியோடு அழிவுத் திட்டத்தினை முன்னெடுப்பது ஆரிய-திராவிட கூட்டுச்சதியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. திமுக அரசினால் முன்னெடுக்கப்பட்டு, பாஜக அரசினால் அனுமதி வழங்கப்பட்டு, மக்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காத இத்திட்டம் அமைவதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டத்தினை முன்னெடுத்து, கடல் சூழலியலுக்கு எதிரான இத்திட்டம் வராமல் தடுக்கப் போராடும்” எனப் பதிவிட்டிருந்தனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்ந்த விக்னேஷ், “பேனா நினைவு சின்னம் அமைப்பது என்பது ஒரு வளர்ச்சித் திட்டமல்ல. இதனால், வேலைவாய்ப்பு பெருகப்போவதல்ல. அதனால் எந்த உற்பத்தியும் அதிகரிக்காது. இப்படியாக, பயன் தராத ஒரு திட்டத்தைக் கடலில்தான் அமைக்க வேண்டுமா?. தவிர, இந்தத் திட்டத்துக்காகக் நடந்தப்பட்ட மக்கள் கேட்புக் கூட்டமும் ஜனநாயகப்பூர்வமாக நடத்தப்படவில்லை. ஜனநாயகமறையற்று நடந்த கூட்டத்தை அடிப்படையாக வைத்து திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதும் நியாயமல்ல. இந்த அனுமதி என்பது சூழலியல் விதிக்கே எதிரானது.
இதைப் எதிர்த்து 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். அந்த வழக்கு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. நா.த.க சார்பாகவும் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகிறோம். தீர்ப்பில் திட்டத்துக்கு தடை விதித்தால், திட்டம் கைவிடப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே, நாங்களும் சட்டப்போராட்டம் நடத்தி சூழலியலுக்கு எதிரான திட்டத்தை எதிர்ப்போம்” என்றார்.
இந்தத் திட்டத்துக்கு எதிராக மதுரை சேர்ந்த ஒருவர், பாஜக-வின் மீனவ அமைப்பைச் சேர்ந்த முனுசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கின்றனர்.
இது குறித்து வழக்கு தொடுத்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “ மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் விசாரணை வரும் ஜூலை முதல் வாரத்தில் நீதிமன்றத்துக்கு வருகிறது. மீனவர்கள் வாழ்வாதரத்தை முற்றிலும் பாழாக்கும் இந்தத் திட்டத்திற்கு மத்திய கடல்சார் ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதைக் கையிலெடுத்து திட்டத்தை உடனடியாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, தார்மீக அடிப்படையில் திட்டத்தை தொடங்காமல் இருப்பதே நல்லது. பின்பு, திட்டம் தொடங்கி 10 கோடி செலவழித்தப் பின் அதற்கு நீதிமன்றம் தடை கோரினால், மக்கள் வரிப்பணம் வீண் தானே… உடனடியாக இந்தத் திட்டத்தைத் தொடங்கும் திட்டத்தைக் கைவிடுவதே நல்லது” என்றார்.
இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தனர் சிலர். அதில் நீதிமன்றம், இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு, இதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தற்போது மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாக அறிகிறேன். ஆனால், எப்படியான வழக்கு வந்தாலும் கருணாநிதிக்காக நினைவுச் சின்னம் அமைக்க வழக்குகளை வென்று நிச்சயமாக திட்டத்தைச் செயல்படுத்துவோம்.
தவிர, இந்தத் திட்டத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம், மீனவர்கள் நலத்துறையிடம் என தடையின்மை சான்றிதழ் பெற்றுதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கடலில் அமைக்கப்பட்ட ’சிவாஜி சிலைக்கு’ எப்படி அனுமதி கிடைத்ததோ, அதேபோல் இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கும். காரணம், அரசு அமைப்புகள், துறைகள் சொல்வதைத்தான் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். அந்த அடிப்படையில் பார்த்தால் திட்டத்திற்கு வழக்கினால் எந்தப் பின்னடைவும் வராது” என்றார்.
பேனா நினைவுச் சின்னத்திற்கு தொடக்க முதலே எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும், திட்டம் இதனால் தடைப்படுமா? என்பதைப் பொறுந்திருந்துதான் பார்க்கவேண்டும்.