கொல்கத்தா: உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி காரணம் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில் இன்று மம்தா பானர்ஜி ஜல்பைகுரியில் இருந்து பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது மோசமான வானிலை நிலவியது. இதனால் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பைலட் சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார். இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி இன்று மாலையில் கொல்கத்தாவில் உள்ள அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
இந்நிலையில் தான் தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதில் மம்தா பானர்ஜியின் முதுகு மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதும் தெரியவந்துள்ளது.