அலகாபாத்: ‘ஆதிபுருஷ்’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 27) விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது படக்குழுவினரை நீதிமன்றம் கடுமையாக சாடியது. தணிக்கை வாரியத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியது.
பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது ‘ஆதிபுருஷ்’ திரைப்படம். பெரும் பொருட்செலவில் ராமாயண இதிகாசத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இடம்பெற்ற சில வசனங்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மேலும், படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், ஆடை வடிவமைப்பு ஆகியனவற்றை சுட்டிக்காட்டி படம் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆதிபுருஷ் படத்துக்கு எதிரான வழக்கு அலகபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் சில காட்டமான கேள்விகளை முன்வைத்தது. “ஆதிபுருஷ் படத்தைக் காணும்போது தணிக்கை வாரியம் என்ன செய்தது? அதன் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டதா? எதிர்கால சந்ததிகளுக்கு என்ன மாதிரியான கற்பிதங்களைக் கொண்டு சேர்க்க தணிக்கை வாரியம் விரும்புகிறது?” என்று நீதிமன்றம் வினவியது.
மேலும், விசாரணையின்போது தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் பிற சம்பந்தப்பட்டவர்கள் ஏன் ஆஜராகவில்லை என்றும் நீதிமன்றம் வினவியது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மூளை இல்லை என நினைத்தீர்களா? – மேலும், நீதிமன்றம் படக்குழுவை விமர்சிக்கையில், “இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் சட்டம் – ஒழுங்கை மீறாமல் இருந்திருக்கின்றனர் என்பது நல்ல விஷயம். அனுமனும், சீதையும் சித்தரிக்கப்பட்ட விதம் வேதனையாக இருக்கிறது. சிலக் காட்சிகள் ‘ஏ’ கேட்டகிரி காட்சிகள்போல் உள்ளன. இப்படிப்பட்ட படத்தைப் பார்ப்பது மிகவும் கடினம். இது மிகவும் சிக்கலான விஷயம்.
சொலிசிடர் ஜெனரல் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால், காட்சிகளை என்ன செய்வது? இது தொடர்பாக தணிக்கை வாரியத்திடம் கேள்வி கேளுங்கள். பின்னர் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். ஒருவேளை இந்தப் படம் தடை செய்யப்பட்டால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறோம்.
படத்தில் பல சர்ச்சைகளை வைத்துக் கொண்டு பொறுப்புத் துறப்பு பதிவிட்டிருந்தோம் என்று படக்குழு தரப்பு வாதிடுவது விநோதமாக இருக்கிறது. நீங்கள் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது ராமாயணம் அல்ல என்று பொறுப்புத் துறப்பு வாசகம் போடுவீர்கள்… அதை மக்களும், இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.