ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும்? – புதினுக்கு பின்னடைவு என நிபுணர்கள் கருத்து

மாஸ்கோ,

ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டாலும், ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த சம்பவம் அதிபர் புதினுக்கு பின்னடைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனியார் படை

உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்பட்டது.

இந்நிலையில் தங்கள் படை வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டிய தனியார் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின், அந்நாட்டு அரசுக்கு எதிராக திரும்பினார். தலைநகர் மாஸ்கோவுக்கு முன்னேற தனது வீரர்களுக்கு அவர் உத்தரவிட்டார். ரஷிய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானை எந்த எதிர்ப்புமின்றி கைப்பற்றிய வாக்னர் குழு மாஸ்கோவை நோக்கி நகர்ந்தது.

இதனால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டது. பிரிகோசினை கடுமையாக விமர்சித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தனியார் படையினர் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

மாஸ்கோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தனியார் படையின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் ஆங்காங்கே நெடுஞ்சாலைகளை ரஷிய ராணுவத்தினர் துண்டித்தனர்.

சமரசம்

மாஸ்கோவை 200 கி.மீ. தூரத்தில் தனியார் படை நெருங்கிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கும், ரஷிய அரசுக்கும் சமரசம் ஏற்பட்டது. பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ முயற்சியில் நடந்த இந்த சமரசத்தில், தனியார் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோசினுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவர் பெலாரஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது வீரர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ரஷியா அறிவித்தது.

பிரிகோசின் தனது வீரர்களை உக்ரைனில் உள்ள முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டார்.

இதனால் கடந்த சனிக்கிழமை வெறும் 24 மணி நேரத்தில் இந்த திடீர் கிளர்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. தலைநகர் மாஸ்கோ உள்பட ரஷியாவில் இயல்புநிலை திரும்பியது. கிளர்ச்சியை அடுத்து மாஸ்கோவிலும், வொரோனேஜ் பிராந்தியத்திலும் அமல்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நிர்வாக முறை ரத்து செய்யப்பட்டது.

அடுத்து என்ன நடக்கும்?

ஆனால் கிளர்ச்சி சம்பவத்தை அடுத்து, ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும்?, தனியார் படையின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

தனியார் படையின் கிளர்ச்சி, ரஷிய பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிச்சமிட்டுக்காட்டியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அசைக்க முடியாத அதிகாரமிக்க தலைவராக கருதப்படும் அதிபர் புதினின் மதிப்புக்கு இந்த சம்பவம் சேதத்தை ஏற்படுத்திவிட்டது, அவருக்கு இது பின்னடைவுதான் என்று கூறுகின்றனர். வல்லரசாக கருதப்படும் ரஷியா, ஒரு கூலிப்படையுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிலைக்கு இறங்கிவிட்டதாக விமர்சிக்கின்றனர். அந்த படை, ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரை மிக சுலபமாக தங்கள் வசப்படுத்தியதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்கா கருத்து

சமரச உடன்பாடு குறித்து பெலாரஸ் ஜனாதிபதிதான் தகவல் தெரிவித்துள்ளார். புதினோ, பிரிகோசினோ, ரஷிய ராணுவ உயர் அதிகாரிகளோ இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்நிலையில், நடந்துள்ள சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், ‘இது அசாதாரணமானது. 16 மாதங்களுக்கு முன்பு, உக்ரைன் தலைநகரை எளிதில் கைப்பற்றிவிடுவார் என்று கருதப்பட்ட புதின், இன்று தனது தலைநகரை தற்காத்திட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்’ என்று கூறியுள்ளார்.

உக்ரைன் சென்ற ராணுவ மந்திரி

ரஷிய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, பின்னர் சமாதான கொடி பிடித்த கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின், ராணுவ மந்திரி ஷெர்ஜி ஷோய்குவை பதவிநீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், கிளர்ச்சி பரபரப்புக்கு பின் முதல் முறையாக ரஷிய ராணுவ மந்திரி ஷெர்ஜி ஷோய்கு பொது இடத்தில் தோன்றினார். உக்ரைனில் உள்ள தங்கள் ராணுவ வீரர்களை நேற்று அவர் பார்வையிட்ட வீடியோவை ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டது.

ரஷிய தரப்பில் உள்குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.