வருத்தம் தான்.. ரஷ்யாவுக்கு எதிராக கலகம் ஏன்? 11 நிமிட ஆடியோ வெளியிட்டு வாக்னர் குழு தலைவர் விளக்கம்

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக செயல்பட்டு வந்த தனியார் ஒப்பந்த ராணுவ அமைப்பான வாக்னர் குழு திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் ஏன் மாறினோம் என்பதற்கு வாக்னர் குழு தலைவர் 11 நிமிட ஆடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிரப்வரி மாதம் போர் தொடுத்தது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பெரும் உதவியாக இருந்தது வாக்னர் குழு எனப்படும் தனியார் ஒப்பந்த ராணுவ அமைப்பு ஆகும். கூலிப்படை போல இயங்கும் இந்த அமைப்புதான் ரஷ்யாவுக்கு போரில் உறுதுணையாக இருந்தது.

ஆனால், திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே வாக்னர் குழு திரும்பியது. போரில் சரியான ஆயுதங்களை வாக்னர் குழுவிற்கு ரஷ்ய ராணுவம் கொடுப்பது இல்லை என்று கருதிய வாக்னர் குழு திடீரென கலகம் செய்தது. இதனால் ரஷ்யா கதி கலங்கி போனது என்றுதான் சொல்ல வேண்டும். வாக்னர் குழு தலைவர் யெவ்ஜின் பிரிகோஜின் முதுகில் குத்திவிட்டார் எனவும் இது அப்பட்டமான துரோகம், தனிநபர் விருப்பங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது தேசத்துரோக குற்றம் எனவும் மிகவும் ஆவேசமாக புதின் விமர்சித்து இருந்தார்.

11 நிமிட ஆடியோ: மற்றொரு பக்கம் ரஷ்யாவின் ஆட்சி தலைமையை மாற்றுவோம் என மாஸ்கோ நகரை நோக்கி வாக்னர் குழு முன்னேறியது. அதுமட்டும் இன்றி ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஆன் டான் நகரை தன்வசமாக்கியது. இதனால் ரஷ்யாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பெலாரஸ் அதிபர் தலையிட்டதால் வாக்னர் குழு கிளர்ச்சியை கைவிட்டது.

ரஷ்ய அதிபரும் பிரிகோஜின் மீதான வழக்குகளை கைவிடுவதாகவும் வாக்னர் படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் உறுதி அளித்தார். இதையடுத்து கலகத்தை கைவிட்டுவிட்டு வாக்னர்குழு தலைவர் பிரிகோஜின் ரஷ்யாவை விட்டு வெளியேறினார். தற்போது வரை பிரிகோஜின் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இதனிடையே 11 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு ஆடியோவை வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் வெளியிட்டுள்ளார்.

வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: அதில், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தினோம். ரஷ்ய அரசை வீழ்த்துவதற்காக செல்லவில்லை. வாக்னர் போராளிகளின் அழிவை தடுப்பதும் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ செயல்பாட்டில் அஜாக்கிரதையாக செயல்பட்ட ராணுவ தளபதிகளை பொறுப்பு உடமை ஆக்குவது ஆகியவையே எனது இலக்கு ஆகும். ரஷ்ய மண்ணில் எங்கள் வீரர்கள் போரில் ஈடுபடவில்லை.

ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். எனினும் தனது இருப்பிடம் குறித்து வெளிப்படையாக எதுவுமே கூறவில்லை. அதேபோல், கலகத்தை முடித்தற்கு ரஷ்யாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் குறித்தும் யெவ்கெனி பிரிகோஜின் அந்த ஆடியோவில் வாய் திறக்கவில்லை.

இதனிடையே, பிரிகோஜினுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் எதுவும் கைவிடப்படவில்லை என்று ரஷ்யாவின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சியை கைவிட்ட போது கிரிமினல் நடவடிக்கைகள் என ரஷ்யா ஒப்புக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு நேர்மாறான செயல்படாக இது பார்க்கப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.