பெங்களூரு: கர்நாடக தலைமைச் செயலகம் செயல்படும் விதான சவுதா கட்டிடத்தின் 3-வது மாடியில் முதல்வரின் அலுவலகம் உள்ளது. இதற்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் தெற்கு நுழைவு வாயில் வாஸ்து சரி இல்லை என கூறப்பட்டதால் அதன் கதவு 5 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.
இதனை அறிந்த முதல்வர் சித்தராமையா இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, வாஸ்து காரணமாக அந்த கதவு மூடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும் அந்த வாயில் வழியே அலுவலகத்தில் நுழைந்தால் முதல்வர் பதவியில் நீண்ட காலம் நீடிக்க முடியாது என கூறியதால் முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் அந்த நுழைவு வாயிலை மூடி வைத்துள்ளனர் என தெரிவித்தனர்.
இதற்கு சித்தராமையா, ‘‘எனக்கு வாஸ்து, ஜோதிடம் போன்ற மூடப்பழக்க வழக்கங்களில் நம்பிக்கை இல்லை. அந்த கதவை திறந்து வையுங்கள். இனி அந்த கதவு வழியாகவே அலுவலகத்துக்கு வந்து செல்வேன்” என்றார்.
இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் தெற்கு நுழைவுவாயிலின் கதவு திறக்கப்பட்டது. அதன்வழியே உள்ளே நுழைந்த முதல்வர் சித்தராமையா, இலவச அரிசி திட்டத்தை தொடங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுபற்றி சித்தராமையா கூறுகையில், ‘‘நல்ல மனம், சுத்தமான இதயம், பிறர் மீதான அக்கறை, அறைக்குள் நன்றாக காற்று வருவது, நல்ல முறையில் வெளிச்சம் வருவதுதான் சிறந்த வாஸ்து. மாறாக சுவர்களை இடிப்பது, நுழைவுவாயிலை ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு மாற்றுவது அல்ல” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையாவின் இந்த நடவடிக்கைக்கு முற்போக்கு சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் சித்தராமையா இறை நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் மூடப்பழக்க வழக்கங்களை நம்புவதில்லை. தேர்தல் நேரங்களில் மட்டும் கோயிலுக்கு செல்லும் அவர் பூஜை, திருவிழா ஆகியவற்றில் பெரிதாக பங்கேற்பதில்லை. மடாதிபதிகள், ஆன்மீக தலைவர்கள் ஆகியோரிடமும் நெருங்கி பழகுவதில்லை.
கர்நாடகாவில் முதல்வராக இருப்பவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு சென்றால் முதல்வர் பதவியை இழந்து விடுவர் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்தது. ஆனால் கடந்த 2013-ல் சித்தராமையா முதல்வராக இருந்த போது அந்த ஊருக்கு செல்வதாக சவால் விட்டார். சொன்னதைப் போலவே அந்த ஊருக்கு சென்று, மூடநம்பிக்கையை முறியடித்தார். 5 ஆண்டுகள் முழுமையாக முதல்வர் பதவியில் இருந்தார்.