சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் அடுத்தடுத்து மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் முதல் பாகத்தின் சூட்டிங் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜூன் 30ம் தேதி வெளியாகும் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சிவராஜ்குமார் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்திற்காக தன்னுடைய கெட்டப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் நடிகர் தனுஷ். நீண்ட தாடி, மீசை, தலைமுடி என வித்தியாசமான தனுஷை இந்தப் படத்தில் பார்க்க முடிந்தது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் மாதத்திலும் டீசர் ஜூலையிலும் வெளியாகும் என்று முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதனிடையே இன்று மாலை படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை தயாரிப்புத் தரப்பான சத்யஜோதி பிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 30ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக்குடன் இணைந்து படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த அறிவிப்பு தற்போது பர்ஸ்ட் லுக்குடன் இணைந்து வெளியாகாது என்று கூறப்படுகிறது.
படத்தின் சூட்டிங் இன்னும் நிறைவடையாத நிலையில், அடுத்த மாதம் வெளியாகும் டீசருடன் இணைந்து படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகையொட்டி இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. அதனால் இந்த முறை படத்தின் சூட்டிங்கை முழுமையாக நிறைவு செய்துவிட்டே, படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளது.
கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தற்போது தனுஷை வைத்து பீரியட் ஜானரில் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிவருகிறார் அருண் மாதேஸ்வரன். இந்தப் படம் அடுத்தடுத்த 3 பாகங்களாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மூன்று காலகட்டங்களை கூறும் வகையில் திரைக்கதை அமையும் என்று கூறப்பட்டுள்ளது.