புதுடில்லி:புதுடில்லியில் வடிகால்களில் துார்வாரும் பணி முடிந்து விட்டது. மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
தலைநகர் டில்லியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இரண்டு நாட்களுக்கு முன்பே துவங்கியது. கோடை காலத்தின் கடும் வெப்பத்தில் சிக்கித் தவித்த தலைநகர்வாசிகள் மழை காரணமாக சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
அதேநேரத்தில், மழைக்காலத்தில் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்குவது தலைநகரின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. சாலைகளில் வடிகால்களை டில்லி மாநகராட்சி பராமரித்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள வடிகால்களை டில்லி அரசின் பொதுப்பணித் துறை பராமரிக்கிறது. தென்மேற்கு பருவமழை ஜூன் 27ல் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 15ம் தேதிக்குள் மாநகரில் அமைந்துள அனைத்து வடிகால்களிலும் துார்வாரும் பணியை நிறைவு செய்ய மேயர் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மேயர் ஷெல்லி ஓபராய் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
அப்போது, அவர் பேசியதாவது:
நீர் தேங்கக்கூடிய இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக மோட்டார் பம்புகள் அமைக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்த வேண்டும். சாலையில் தேங்கும் நீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். மேலும், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசின் மற்ற துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீனிவாசபுரி, தயாள் சிங் கல்லூரி அருகே உள்ள கோகுல்பூர் மற்றும் படேல் நகர் உள்ளிட்ட இடங்களில் வடிகால்கள் சீரமைக்கப்பட்டது குறித்து, மேயரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது:
டில்லி மாநகர் முழுதும் வடிகால்களை தூர்வாரும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. மழை நீர் தேங்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு நீர் தேங்குவதைக் கண்காணித்து உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நியூ ரோஹ்தக் சாலை, ஜாகிரா நகர் மேம்பாலத்தின் கீழ் பகுதி, லோனி சாலை ரவுண்டானா, ஜஹாங்கிர்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே, மற்றும் கராலா கஞ்சவாலா சாலை ஆகிய இடங்கள் அதிகளவு மழைநீர் தேங்கும் இடங்களாக பொதுப்பணித் துறையால கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
லேசான மழை
தலைநகர் டில்லியின் சில இடங்களில் லேசான மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில், டில்லியில் 5.6 மி.மீ., மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு ஈரப்பதம் 94 சதவீதமாக இருந்தது.நேற்று முழுதுமே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மிதமான மழை பெய்தது. வெப்பநிலை 24.5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியிருந்தது.புதுடில்லி அருகே அமைந்துள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுடில்லி – குருகிராம் சாலை நேற்றும் வெள்ளத்தில் மூழ்கியது. வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றன. மழை நீரை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
ஒருவர் பலி
ஹரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. புதுடில்லி – – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுரங்கப்பாதை நேற்று முன் தினம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு தண்ணீரை அகற்றிய போது, ஒரு உடல் மீட்கப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கி இறந்து கிடந்தவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஹரிபேந்த் என்பதும், ஹரியானா மாநிலம் மானேசர் நகர தனியார் நிறுவன காவலாளி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு மது அருந்திய ஹரிபேந்த், ஞாயிறன்று அதிகாலை வீட்டில் இருந்து வேலைக்குச் சென்றுள்ளார். போதை முற்றிலும் தெளியாத நிலையில், வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் இறங்கியுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கியுள்ளார் என போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்