Goundamani – தேவர் மகனை பங்கமாக கலாய்த்த கவுண்டமணி.. ஷாக்கான சிவாஜி

சென்னை: Goundamani (கவுண்டமணி) தேவர் மகன் படத்தை பார்த்துவிட்டு கவுண்டமணி சிவாஜியிடமே கலாய்த்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

கமல் ஹாசன் எழுத்தில் பரதன் இயக்கத்தில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான படம் தேவர் மகன். கமல் ஹாசன், சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி, நாசர், வடிவேலு என நட்சத்திர பட்டாளமே அந்தப் படத்தில் நடித்திருந்தது. இளையராஜா இசையமைக்க பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் வெளியானபோது மெகா ஹிட்டாகி தேசிய விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்: படம் எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனங்களையும் சந்தித்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பங்காளி சண்டையைத்தான் தேவர் மகன் காட்சிப்படுத்தியது என்றாலும் அதில் இடம்பெற்ற போற்றி பாடடி பெண்ணே பாடல் பிரச்னையின் ஆரம்பப்புள்ளியாக இருந்தது. அந்தப் பாடல் கதைக்காக எழுதப்பட்டு பாடப்பட்டாலும் அது தென் மாவட்டங்களில் வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

பிரச்னைகள்: குறிப்பாக அந்தப் பாடலை பாட சொல்லி ஒடுக்கப்பட்டவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்கள்கூட அந்தப் பாடலையும், தேவர் மகன் படத்தையும் தவறாக புரிந்துகொண்டனவர் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இப்படி பல வருடமாக அந்தப் படத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கபட்டுக்கொண்டே இருந்தது. சூழல் இவ்வாறு இருக்க மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் தேவர் மகன் குறித்து பேசிய பேச்சு மீண்டும் பிரச்னையை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

மாரி பேச்சு: விழாவில் பேசிய மாரி செல்வராஜ், “மாமன்னன் உருவாவதற்கு தேவர் மகன் ஒரு காரணம். தேவர் மகன் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகள் என எல்லாமே இருக்கிறது. அந்த நாட்களை கடக்க முடியாமல் ஒரு சினிமாவாக சமூகத்தை அது எப்படி புரட்டி போடுகிறது. ஒரு சினிமா மொழியாக வேறு ஒரு இடத்தில் அது இருக்கிறது. மறுபக்கம் வேறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரண்டுக்குள்ளும் பின்னி, பிணைந்து சரியா தவறா என்று உழன்று கொண்டிருந்தவன் நான்.

தேவர் மகன் படம் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். எல்லா இயக்குநர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டு படம் எடுப்பார்கள். நானும் பரியேறும் பெருமாள் எடுக்கும் முன்பும், கர்ணன் எடுக்கும் முன்பும் தேவர் மகன் படத்தை பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ஆனால் தேவர் மகன் படம் எனக்கு பெரிய மனப்பிறழ்வை உருவாக்கிய படம். நடப்பதெல்லாம் ரத்தமும் சதையுமாக இருந்தது. இதை எப்படி நான் புரிந்துகொள்வது. இந்தப் படம் சரியா, தப்பா என்பதை புரிந்துகொள்ள முடியாத ஒரு வலி.

தேவர் மகனில் இருக்கும் இசக்கிதான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் மாமன்னன் படம்” என்றார். அவரது இந்தப் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்திருக்கிறது. மேலும் தேவர் மகன் படத்தில் இசக்கியே தேவர் சமூகத்தை சேர்ந்தவர்க்தான் அதைக்கூட மாரியால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் பலர் கூறுகின்றனர். பேச்சு மட்டுமின்றி அவர் 13 வருடங்களுக்கு முன்னர் கமல் ஹாசனுக்கு தேவர் மகன் பற்றி எழுதிய கடிதமும் வைரலானது.

Actor Goundamani trolled Thevar Magan Movie To Sivaji Ganesan

கவுண்டமணி: இப்படி மாமன்னனை சுற்றி சர்ச்சை நெருப்பு மீண்டும் எரிய ஆரம்பித்திருக்க கவுண்டமணியோ சிவாஜியிடமே தேவர் மகன் பற்றி பேசிய சம்பவத்தை நினைவுகூர்தல் கொஞ்சம் சூட்டை தணிக்கும். அதாவது, தேவர் மகன் படத்தில் நடித்து முடித்த பிறகு படத்தின் மீது சிவாஜிக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. எனவே திரைத்துறையில் உள்ளவர்களுக்கு படத்தை போட்டு காண்பிக்க ஒரு ஷோவையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

கவுண்டமணியின் கவுண்ட்டர்: அப்படி படம் பார்த்தவர்களில் கவுண்டமணியும் ஒருவர். படத்தை முடித்து எல்லோரும் சிவாஜியிடம் ஆஹா ஓஹோவென பேசிக்கொண்டிருக்க கவுண்டமணி மட்டும் அந்த இடத்திலிருந்து நழுவி வீட்டுக்கு சென்றிருக்கிறார். சிவாஜிக்கோ கவுண்டமணி எதையுமே படம் பற்றி சொல்லவில்லையே என்ற ஆதங்கம். உடனே வீட்டுக்கு வந்து அங்கு இருந்தவர்களிடம் கவுண்டமணியை வந்து பார்க்க சொல்லு. அவன் மட்டும் படத்தை பத்தி எதுவுமே சொல்லாம போயிட்டானே என்று கூறியிருக்கிறார்.

இதனையடுத்து கவுண்டமணிக்கு தகவல் செல்ல;கவுண்ட்டரோ நான் வந்து என்னத்த சொல்லப்போறேன் என நழுவ பார்க்க இல்லை சிவாஜி கேட்கிறார் வீட்டுக்கு வாருங்கள் என கட்டாய அழைப்பு சென்றிருக்கிறது. மறுக்க முடியாத கவுண்டமணி சிவாஜி வீட்டுக்கு வந்து,படத்தை பத்தி ஒன்னு சொல்வேன் நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். சிவாஜியும் அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். படத்தை பற்றிய உன் கருத்தை சொல்லு என கேட்டிருக்கிறார்.

உடனே கவுண்டமணி, நீங்க படத்துல பெரிய தேவர். நீங்க நடந்தா ஊரே நடக்குது, நீங்க நின்னா ஊரே உட்காருது. அப்படி அவ்வளவு பெரிய ஆளா படத்துல வரீங்க. ஆனா ஒன்னு இவ்ளோ பெரிய மனுஷன் நீங்க; ஒரு சின்ன புள்ளை மிதிச்சதால செத்து போயிட்டீங்களே.இதைத் தாண்டி படத்துல சொல்ல ஒன்னும் இல்லை என ஒரே போடாக போட்டிருக்கிறார். இதனை கேட்ட சிவாஜிக்கு பெரிய ஷாக்காம். இருந்தாலும் கவுண்டமணியின் கவுண்ட்டரை ரொம்பவே ரசித்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் எவ்வளவு சென்சிட்டிவான படத்தை கவுண்டமணி எவ்வளவு நக்கலாக எடுத்துக்கொண்டார். அவரது பார்வையே தனிதான் என கூறிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.