Jailer Update – ஜெயிலர் படத்தில் என்னவெல்லாம் இருக்கும்.. ஸ்டண்ட் மாஸ்டர் வெளியிட்ட அப்டேட்

சென்னை: Jaier Update (ஜெயிலர் அப்டேட்) சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சிவா ஜெயிலர் படம் குறித்து பல்வேறு விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்போது ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார். ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.அனிருத் இசையமைத்திருக்கிறார். பீஸ்ட் படத்தின் தோல்வியால் விமர்சனத்தை கண்ட நெல்சனும், அண்ணாத்த, தர்பார் படங்களில் தோல்வியை சந்தித்த ரஜினிகாந்த்தும் இணைந்து இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கின்றனர்.

அட்டகாச க்ளிம்ப்ஸ்: படம் எப்படி உருவாகியிருக்கிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த அறிவிப்போடு வெளியான க்ளிம்ப்ஸில் ரஜினிகாந்த்தின் லுக்கும், அவரது நடிப்பும் மிரட்டலாக இருந்ததன் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். மேலும் டார்க் காமெடியில் நெல்சன் கில்லி என்பதாலும் காமெடி ரோலில் ரஜினியும் கலக்குவார் என்பதாலும் அதனை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

ஸ்டண்ட் சிவா பேட்டி: இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியிருக்கும் ஸ்டண்ட் சிவா ஜெயிலர் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசுகையில், “நான் முதன்முதலில் ரஜினியோடு பாண்டியன் படத்தில் பணியாற்றினேன் அதை தொடர்ந்து எஜமான் படத்தில் பணியாற்றினேன் பின்னர் மன்னன். அதன் பிறகு முத்து திரைப்படத்தில் மொத்த படத்திற்குமான சண்டைக் காட்சிகளின் கம்போசிங்கை நான்தான் செய்தேன்.

ரஜினி ரசிகன்: நானும் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகன் என்பதால் அவருக்கு எப்படி கம்போஸ் செய்ய வேண்டும் என தெரியும். இப்போது அதை என்னுடைய மகனுக்கு சொல்லிக் கொடுத்து இப்போது என்னுடைய மகன் கெவினும் நானும் சேர்ந்து ஜெயிலர் படத்தில் பணியாற்றி இருக்கிறோம். ஒரு ரசிகன் ஒரு ஃபைட் சீன் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

ஸ்டைல்னா அவர்தான்: ஸ்டைல் என்றால் என்ன என்பதை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ரஜினிகாந்த்தே வியப்படையும்படிதான் சண்டைக்காட்சியை வைத்திருக்கிறோம். அது பற்றி இப்பொழுது நிறைய பேச முடியாது. படம் நன்றாக வந்திருக்கிறது. கிளைமாக்ஸ் எல்லாம் வேற லெவலில் இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பானதாக அமைந்திருக்கிறது.

நெல்சனுக்கு ஃபோன் செய்தேன்: நான் கோலமாவு கோகிலா படம் பார்த்ததில் இருந்தே நெல்சனோடு பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். பிறகு நெல்சனுக்கு நானே ஃபோன் செய்து சார் நான் உங்களோடு பணியாற்ற வேண்டும் என கேட்டேன். அப்போது அவர் பீஸ்ட் படம் இயக்கிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் பணியாற்ற முடியவில்லை அப்போது அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்கள் பணியாற்றி வந்தனர்.

சரி அடுத்த படத்தில் பண்ணலாம் மாஸ்டர் என சொன்னார். அதன்படி திடீரென ஒரு நாள் ஃபோன் செய்து ரஜினி சார் படம் பண்ண வேண்டும் என்றார். இயக்குநரையும் எனக்கு பிடிக்கும். நான் ரஜினியின் ரசிகனும்கூட. எனவே உடனடியாக ஒத்துக்கொண்டேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.