வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை இன்று (ஜூன் 27) மும்பையில் வெளியிடப்பட்டது. இதில் அக்டோபர் 15ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.
இந்திய மண்ணில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) வரும் அக்.,5 முதல் நவ.,19 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். 45 லீக் போட்டி முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் நவ.,19ல் இறுதிப்போட்டியில் மோதும். இதற்கான தற்காலிக அட்டவணை முடிவு செய்யப்பட்டு, மற்ற அணிகள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுகள் இடையே நிலவும் பனிப்போர் காரணமாக அட்டவணை வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதுவரை ஐ.சி.சி., அனுப்பிய பரிந்துரை அட்டவணை குறித்த தனது முடிவை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை. எனினும் உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் போட்டி அட்டவணை, இன்று மும்பையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதன்படி, அக்., 5ல் நடக்கும் முதல் போட்டியில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அக்.,8ல் சென்னையில் எதிர்கொள்கிறது. சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுகிறது. முதலாவது அரையிறுதி (நவ.,15) மும்பையிலும், இரண்டாவது அரையிறுதி (நவ.,16) கோல்கட்டாவிலும் நடைபெறுகிறது. நவ.,19ல் நடக்கும் பைனல், ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது.
மீண்டும் இந்தியா வசமாகுமா கோப்பை?
இந்திய அணி இதுவரை 2 முறை மட்டுமே உலக கோப்பையை (50 ஓவர்) வென்றுள்ளது. 1983ல் கபில்தேவ் தலைமையிலும், 2011ல் தோனி தலைமையிலும் வென்றிருக்கிறது. இதில், கடைசியாக வென்ற 2011 உலக கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்றது. இந்தியாவின் மும்பையில் நடந்த பைனலில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அதற்கடுத்து 2013ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றது. அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவாரு ஐ.சி.சி கோப்பையையும் வெல்லவில்லை. எனவே, முதன்முறையாக முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்கும் இந்த உலக கோப்பையை வென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்திய அணி பூர்த்தி செய்யுமா என்பதே இப்போதைய கேள்வி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement