லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அரசு கோப்புகளில் கையெழுத்திட எளிதில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாக்களை (Erasable ink pen) பயன்படுத்துகிறார் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
தி கார்டியன் தினசரி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் பிரதமர் ரிஷி சுனக் இப்படியான பேனாவை பயன்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.495க்கும், இங்கிலாந்து மதிப்பில் 4.75 பவுண்டுக்கும் கிடைக்கும் `பைலட் வி (Pilot V)’ ஃபவுன்டைன் பேனாவைப் பயன்படுத்தி பிரதமர் ரிஷி அமைச்சரவைக் குறிப்புகள், அரசாங்க ஆவணங்கள், சர்வதேச உச்சி மாநாட்டில் உத்தியோகபூர்வ கடிதங்கள் போன்றவற்றில் கையொப்பமிடுகிறார்.
ரிஷி, நிதியமைச்சராக இருந்தபோதும், இப்போது பிரதமராக இருந்தபோதும் இந்தப் பேனாவை பயன்படுத்தினார் என்று பைலட் வி பேனா நிறுவனம் அந்த செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளது. எளிதில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாக்கள் மூலம் கையொப்பமிடுவதால் ரகசிய ஆவணங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக இங்கிலாந்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இதுதொடர்பாக பேசியுள்ள பிரதமர் அலுவலக செய்திதொடர்பாளர், “சிவில் சர்வீஸ் துறையால் இந்தப் பேனா வழங்கப்பட்டது. எப்போதாவது மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. ஒருபோதும் தான் எழுதியதை அழித்து திருத்த பிரதமர் ரிஷி சுனக் இந்த பேனாவை பயன்படுத்தியதில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.