உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான தனது கடைசி குழுநிலை போட்டியிலும் இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
புலவாயோவில் நேற்று (27) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் பத்தும் நிசங்க 75 ஓட்டங்களையும், சரித் அசலங்க 65 63 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றார்.
ஸ்கொட்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் கிறிஸ் கிரீவ்ஸ் 4 விக்கெட்டுகளையும் மார் வாட் 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.
இதனைதொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 29 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்வியடைந்தது.
இலங்கை அணிசார்பில் பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வனிந்து அஹசரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதேவேளை வனிந்து ஹசரங்க இந்தத் தொடரில் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் மொத்தமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழு நிலை போட்டிகளில் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம் கண்ட ஓமான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளை வீழ்த்தியதன் மூலம் பெற்ற நான்கு புள்ளிகளும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கை அணி சுப்பர் சிக்ஸ் புள்ளிப்பட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றுடன் குழுநிலை போட்டிகள் முடிவுற்ற நிலையில் நாளை (29) சுப்பர் சிக்ஸ் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.