'உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதக்கூடும்' – சேவாக் கணிப்பு

மும்பை,

ஐ.சி.சி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் பேசுகையில், ‘இந்தியாவில் நடைபெறும் போட்டியில் ஆசிய அணிகள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறமுடியாது. தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா வீரர்கள் அதிக எண்ணிக்கையில் விளையாடுகிறார்கள். எனவே அவர்களும் இங்கு சிறப்பாக விளையாட வாய்ப்பு உள்ளது. இந்திய வீரர்கள் பிறந்தது முதல் இங்கு விளையாடுவதால் அவர்களுக்கு மைதானங்களை பற்றி நன்றாக தெரிந்து இருக்கும்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை சச்சின் தெண்டுல்கருக்காக விளையாடினோம். அந்த உலகக் கோப்பையை வென்று சமர்ப்பித்தோம். அதே போல் தற்போது விராட் கோலி இருக்கிறார். அவருக்காக இந்தியா இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவர் எப்போதும் 100 சதவீதத்துக்கு மேலான பங்களிப்பை அளிக்கக்கூடியவர். அவரும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு ரொம்ப ஆவலுடன் இருப்பார். அவர் நிச்சயம் அதிக ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

எல்லோரையும் போல நானும் இந்தியா – பாகிஸ்தான் மோதலை காண ஆவலாக உள்ளேன். இந்த ஆட்டத்தில் யார் வெல்வார் என்பதை சொல்வது கடினம். ஆனால் நெருக்கடியை திறம்பட கையாளும் அணிக்கு வெற்றி வசமாகும். இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்பதே எனது கணிப்பு. இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதக்கூடும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.